உத்தரபிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது பாஸ்தி மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் தனது பெற்றோர்களுடன் 13 வயது சிறுமி வசித்து வந்தார். இந்த நிலையில், அவர் கடந்த திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் வீட்டில் இருந்து அருகில் இருந்த காய்கறி சந்தைக்கு காய் வாங்கச் சென்றுள்ளார்.


கூட்டுப்பாலியல் வன்கொடுமை:


ஆனால், காய் வாங்கச் சென்ற சிறுமி மாலை 7.30 மணி ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். மிகவும் பதற்றமடைந்த அவரது தந்தை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். அப்போது, அவருக்கு ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அவரது மகள் அங்கே உள்ள பள்ளியில் உயிரிழந்து சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.


இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அந்த சிறுமியின் தந்தையும், அக்கம்பக்கத்தினரும் சிறுமியின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.


13 வயது சிறுமி:


இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். போலீசார் விசாரணையில் சிறுமியின் தந்தைக்கு தகவல் தெரிவித்தது யார்? என்று போலீசார் விசாரித்துள்ளனர். பின்னர், அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது அந்த 13 வயது சிறுமியை 3 பேர் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.


காய்கறி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை 14 வயது சிறுவன் ஒருவன் பள்ளி வளாகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளான். கோடை விடுமுறை என்பதால் பள்ளி வளாகத்தில் ஆள் நடமாட்டமின்றி இருந்துள்ளது. சிறுமியை அழைத்துச் சென்ற சிறுவன் சிறுமிக்கு நன்கு தெரிந்த நபர் என்பதால் சிறுமியும் உடன் சென்றுள்ளார்.


பா.ஜ.க. முன்னாள் தலைவர்:


அங்கு 23 வயது மற்றும் 24 வயது இளைஞர்கள் இருவர் இருந்துள்ளனர். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து மாணவியை பள்ளி வளாகத்திலே கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில், அலறித்துடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மூன்று பேரும் சிறுமியின் சடலத்தை அப்படியே போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.


குற்றவாளிகளில் ஒருவர் 14 வயதே நிரம்பிய சிறுவன் என்பதால் அவனை பிடித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். மற்ற இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் பா.ஜ.க.வின் கிஷன் மோர்ச்சா பிரிவின் முன்னாள் தலைவர் ஆவார்.


போலீஸ் அலட்சியமா?


குற்றவாளிகள் மீது கொலை வழக்கு, கூட்டுப்பாலியல் வன்கொடுமை, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை நடந்த இந்த கோர சம்பவத்தின் முக்கிய குற்றவாளி பா.ஜ.க.விற்கு தொடர்புடையவர் என்பதால் அவரை கைது செய்ய காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால் உயிரிழந்த சிறுமியின் தந்தை கூறினார். பின்னர், கடும் விமர்சனங்களும், அழுத்தங்களும் ஏற்பட்ட காரணத்தால் பா.ஜ.க. கிஷன் மோர்ச்சா முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டார்.


இந்த சம்பவம் தொடர்பாக பாஸ்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது, முதல் குற்றவாளி 4 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார். மற்ற 2 குற்றவாளிகளும் 36 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர் என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். 13 வயதே ஆன சிறுமியை 14 வயது சிறுவன் உள்பட 3 பேர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.