வெளிநாட்டிற்கு சென்று கல்வி பயில்வதற்கும், வேலை பார்ப்பதற்கும் இந்தியர்களின் பெரும்பாலான தேர்வாக கனடா உள்ளது. கனடாவில் இந்தியர்கள் அதிகளவில் படித்து வருகின்றனர். அதேபோல, அதிகளவு இந்தியர்கள் கனடாவிலே குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கனடாவிற்கு படிக்கச் சென்ற 700 இந்திய மாணவர்கள் போலி ஆவணங்கள் மூலம் அங்கு சென்றது மார்ச் மாதம் அந்த நாட்டு குடியுரிமை அதிகாரிகளாக கண்டறியப்பட்டது. தற்போது இந்த விவகாரம் காரணமாக கனடாவில் சிக்கித் தவித்து வரும் 700 இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படும் அபாயத்திற்கு ஆளாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாடு கடத்தப்படும் அபாயம்:


போலி ஆவணங்கள் காரணமாக நாடு கடத்தப்படும் அபாயத்திற்கு உள்ளாகி உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் அமைச்சர் குல்தீப்சிங் தலிவால் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், “கனடாவில் உள்ள 700 மாணவர்கள் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். 700 மாணவர்களில் பெரும்பாலோனார் பஞ்சாப் மாணவர்கள். 700 மாணவர்கள் அப்பாவி மாணவர்கள். இவர்கள் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டுள்ளனர். நீங்கள் மீண்டும் இந்த விஷயத்தை தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து, கனடாவின் உயர் அமைப்பினருடன் கலந்தாலோசித்தால் மாணவர்கள் நாடு கடத்தப்படுவதில் இருந்து காப்பாற்ற முடியும்.” என்று கூறியுள்ளார்.


இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று படிப்பதற்கும், வெளிநாடு சென்று வேலை பார்ப்பதற்கும் அரசின் அங்கீகாரம் பெற்ற பல முகமைகள் செயல்பட்டு வருகின்றன. சில போலி முகமைகளும் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிரிஜேஷ் என்பவர் உயர்கல்விக்காக மாணவர்களை கனடாவிற்காக அனுப்பும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.


700 மாணவர்கள்:


முகவர் பிரிஜேஷ் மிஸ்ரா என்பவர் மூலமாக 2018ம் ஆண்டு 700 மாணவர்கள் கனடா சென்றுள்ளனர். இந்த மாணவர்கள் அனைவரும் கடந்தாண்டு அவர்களது உயர்கல்வியை நிறைவு செய்துள்ளனர். படிப்பை நிறைவு செய்த அவர்கள் வேலைவாய்ப்பு காரணமாக அந்த நாட்டில் நிரந்தர குடியிருப்பு கோரி விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, அவர்களது ஆவணங்கைள அந்த நாட்டு குடியேற்ற துறை பரிசோதித்துள்ளது. ஆவணங்களை பரிசோதித்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.


நிரந்தர குடியிருப்பு கோரி விண்ணப்பித்திருந்த 700 மாணவர்களின் ஆவணங்களும் போலியாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, இந்திய மாணவர்கள் 700 பேரையும் திருப்பி அனுப்ப அந்த நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்தது. அதாவது, 700 பேரையும் நாடு கடத்த உத்தரவு பிறப்பித்தது. இந்த விவகாரம் கடந்த மார்ச் மாதம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கதி என்ன?


இந்த சம்பவம் தொடர்பாக கனடாவில் அமைந்துள்ள ப்ரண்ட்ஸ் ஆப் கனடா & இந்தியா அமைப்பு 700 மாணவர்களுக்கு ஆதரவாக கடந்த மாதம் கடிதம் எழுதியது. அவர்கள் அந்த நாட்டு அரசுக்கு எழுதிய கடிதத்தில் மாணவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தது. பிரிஜேஸ் மிஸ்ராவிடம் ஒவ்வொரு மாணவரும் சுமார் 16 லட்சம் முதல் 20 லட்சம் வரை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 700 மாணவர்களின் கதிஎன்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், அவர்களை காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 


மேலும் படிக்க: Crime: கொடூரம்! 13 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து கொலை - பாஜக முன்னாள் தலைவர் உள்பட 3 பேர் கைது!


மேலும் படிக்க: Agni Missile: கண்டம் விட்டு கண்டம் பாயும் ’அக்னி பிரைம்' ஏவுகணை.. 2000 கிமீ தொலைவு செல்லும் சோதனை வெற்றி..