பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், பெண்களிடம் தவறாக நடந்துகொள்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


மத்திய பிரதேசத்தில் வருகின்ற 17ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டுமென்று ஒவ்வொரு கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வாக்குறுதிகள் மட்டுமல்லாது தலைவர்கள் மற்றொரு தலைவர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் அடுக்கி வருகின்றனர்.


இந்தநிலையில், துர்காஷ்டமியை முன்னிட்டு மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது பேசிய அவர், ”பாஜகவுக்கு வாக்களித்தால் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் சாகும் வரை தூக்கிலிடப்படுவார்கள்” என்று கூறினார். 


இதுகுறித்து பேசிய அவர், “மகள்கள் மற்றும் சகோதரிகளிடம் தவறாக நடந்து கொள்பவர்கள் தப்பிக்கப்பட மாட்டார்கள். தேவைப்பட்டால் புல்டோசர்கள் கொண்டு அவர்களின் சொத்துக்களை அபகரிக்கச் செய்யக்கூடும்.  மக்களின் உரிமைகளை மீறுபவர்களை எக்காரணம் கொண்டும் விட்டுவைக்க மாட்டோம். ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி வழங்கி அனைவருக்கும் சேவை செய்வோம்.” என்றும் தெரிவித்தார். 


முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்துக்கு கேள்வி..? 


தொடர்ந்து முதலமைச்சர் சிவராஜ், முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்துக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அப்போது அவர், “நாங்கள் வாக்குறுதிகளை அளிப்பதில்லை, செய்யும் வேலையைத்தான் சொல்கிறோம். காங்கிரஸ் ஒவ்வொரு நாளும் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறது. அவர்கள் மக்களிடம் அன்பின் கடையைத் திறக்கவில்லை, பொய்களின் கடையை மட்டுமே திறக்கிறார்.


ஒவ்வொரு நாளும் பொய்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டாவது பெரிய பொய் கடிதத்தை அவர் கொண்டு வந்தாரா என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். ஆனால் முதல் உறுதிமொழிக்கு என்ன ஆனது. கடனை தள்ளுபடி செய்வோம் என்று கூறிய காங்கிரஸ் ஏன் அனைவரின் கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. இதற்கு பதில் சொல்லுங்கள் கமல்நாத். விவசாயிகளுக்கு பயிர்களின் ஆதரவு விலையில் போனஸ் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தனது வாக்குறுதிக் கடிதத்தில் கூறியிருந்தது. ஒரு பைசா போனஸ் கொடுக்காததற்கு கமல்நாத் பதில் சொல்ல வேண்டும்.


கிராம சபையின் பரிந்துரையின் அடிப்படையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பலன்களை வழங்குவோம் என்றும், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பலனை ஒதுக்கி வைத்துவிட்டு, RBC 6(4) இன் பலனைக் கூட வழங்கவில்லை. வெள்ளம் மற்றும் கனமழையில் விவசாயிகள் தங்கள் பயிர்கள் முற்றிலும் அழிந்தபோது, ​​அதற்கு எந்தவொரு நிவாரணத்தையும் வழங்கவில்லை.  டெல்லியில் இருந்து வரவிருந்த பிரதமர் கிசான் சம்மன் நிதிக்கான பட்டியலை கூட மத்திய அரசுக்கு கொடுக்காமல், காங்கிரஸ் மேலும் ஒரு பெரிய பாவத்தை செய்து விட்டது. லட்சக்கணக்கான விவசாயிகள் கிசான் சம்மன் நிதி கிடைக்காமலே போய்விட்டார்” என்றார்.


முன்னதாக, உஜ்ஜயினியில் மைனர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் பாஜக அரசை விமர்சித்தார். தற்போதைய பாஜக நிர்வாகத்தின் கீழ் மாநிலம் "சௌபத் பிரதேசம்" (பாழடைந்த மாநிலம்) ஆக மாறிவிட்டது. இது வேதனையாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.