மத்திய பிரதேசத்தில் நடத்துனர் ஒருவரை என்சிசியை சேர்ந்த ஒருவர் பேருந்தில் கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் கட்டணம் தொடர்பான தகராறில் பயணி ஒருவர் மாநகரப் பேருந்து நடத்துனரைத் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு என்.சி.சி கேடட்டை சேர்ந்த ஒருவர் போலீஸ் தலைமையகத்திற்கான வாரிய அலுவலகத்திற்கு அருகே பேருந்தில் ஏறி பயணம் செய்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. 






நடத்துனரை தாக்கும் கொடூரமான வீடியோ காட்சிகள் முழுவதும் பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து ஜஹாங்கிராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.


25 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில், பேருந்து நடத்துனருக்கும், சீருடையில் இருந்த என்சிசி கேடட்டுக்கும் இடையே கட்டணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேருந்தில் ஏறிய என்சிசி கேடட் 10 ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்டதாகவும், நடத்துனர் டிக்கெட்டின் விலை ரூ .15, எனவே மீதமுள்ள 5 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். 


இதனால் ஆத்திரமடைந்த என்சிசி கேடட், நடத்துனர் எதிர்பாராத நேரத்தில் அவர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்த தொடங்கினார். தொடர்ந்து நடத்துனரை தாக்கிவிட்டு பேருந்து நின்றதும் அந்த இளைஞர் சென்றதையும் வீடியோவில் காண முடிகிறது. 


பேருந்து கழகத்தின் சிவில் அமைப்பு, சிசிடிவி காட்சிகளை காவல்துறையிடம் ஒப்படைத்து அந்த நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. இதையடுத்து, ஜஹாங்கிராபாத் காவல் நிலையத்தில் என்சிசி கேடட் மீது IPC பிரிவு 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்) மற்றும் 504 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.