பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, பெண்ணுக்கு தெரிந்த நபர்களாலேயேதான் தாக்குதல் சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக, மத்திய பிரதேசம் ரேவா மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இளம்பெண் மீது தாக்குதல்:
24 வயது இளைஞர் ஒருவர், தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறி, 19 வயதுப் பெண்ணை கொடூரமாகத் தாக்கியுள்ளார். தாக்கியது மட்டும் இன்றி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
மனதை உலுக்கும் அந்த வைரல் வீடியோவில், இருவரும் கைகளைப் பிடித்தபடி நடந்து செல்வதைக் காணலாம். திடீரென்று அந்த நபர் அவரை அறைந்து, அவருடைய தலைமுடியைப் பிடித்து, தரையில் கீழ் தள்ளி தாக்குகிறார். கொஞ்சம் கூட இரக்கமின்றி அந்த பெண்ணின் தலை மீது காலை வைத்து அவர் உதைக்கிறார். சில நிமிடங்களிலேயே அந்த பெண் மயக்கம் அடைந்து விடுகிறார்.
இருவர் கைது:
பின்னர், அதை வீடியோவாக எடுக்கும் தன்னுடைய நண்பரை அதை டெலிட் செய்யுமாறு கேட்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. இதை தொடர்ந்து, பல மணி நேரமாக, அவர் சாலையிலேயே மயக்க நிலையில் கிடந்துள்ளார். புதன்கிழமை அன்று மௌகஞ்ச் பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
இருவர் மீதும் ஐடி சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளி பங்கஜ் திரிபாதி மற்றும் வீடியோ பதிவு செய்த நபரை கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் இருந்து பங்கஜ் திரிபாதி சில நாட்களிலே பிடிபட்டார். தற்போது இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணின் குடும்பத்தார் திருமணத்திற்கு சம்மதிக்காததால் அந்த பெண் தன்னுடைய காதலை திருமணம் செய்ய மறுத்துள்ளார். அதையடுத்து, கோபம் அடைந்த திரிபாத அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.
சாலையோரத்தில் மயங்கி கிடந்த பெண்ணை அப்பகுதி மக்கள் கண்டு போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.
சிகிச்சை:
இதுகுறித்து ரேவாவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் சோன்கர் கூறுகையில், "அந்த நபர் மௌகஞ்ச் நகரில் உள்ள தேரா கிராமத்தில் வசிப்பவர். இளம்பெண் வேறு கிராமத்தைச் சேர்ந்தவர். இருவருக்கும் இடையே ஏதோ தகராறு ஏற்பட்டது. அந்த நபர் அந்த பெண்ணை தாக்கியுள்ளார். அந்த இடத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகு நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து வந்தோம். பின்னர், அந்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்" என்றார்.