மகாராஷ்டிராவில் சீரியல் நடிகை துனிஷா ஷர்மா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சக நடிகர் சீசன் முகமது கான் (Sheezan Khan) கைது செய்யப்பட்டுள்ளார்.


சீரியல் நடிகை:


மகாராஷ்டிராவில் சீரியல் நடிகை துனிஷா ஷர்மா (20) தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பு தளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அம்மாநில போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேக்-கப் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 


இவர் பாலிவுட் சினிமாவில் அதிக படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். பின்னர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். நேற்று மும்பை அருகில் உள்ள வசாய் நைகாவ் ராம்தேவ் ஸ்டூடியோவில் நடைபெற்ற படப்பிடிப்பின் மதிய உணவு இடைவேளையில் மேக்கப் அறைக்கு சென்றவர் வெகு நேரம் ஆகியும் ஷூட்டிங் திரும்பவில்லை. அறையில் பின்னர் சென்று பார்த்தபோது அவர் மின்விசிறியில் சடலமாக தொங்கியுள்ளார்.






சக நடிகர் மீது வழக்குப்பதிவு : 


துனிஷா சர்மா மரணம் தொடர்பாக  நடிகையின் தாயார் சக நடிகர் சீசன் முகமது கான் மீது புகார் அளித்தார். இதையெடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்யப்பட்டது. 


இது குறித்து போலீசார் கூறுகையில், ``படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களிடம் விசாரணை செய்து வருகிறோம்" என்று தெரிவித்தனர். 


துனிஷா அலிபாபா தஸ்தான்-இ-காபூல் என்ற டிவி தொடரில் நடித்து வந்தார். துனிஷா சர்மா சகீன் முகமது கானை காதலித்து வந்ததாகவும், துனிஷாவின் மரணத்திற்கு சகீன்தான் காரணம் என்றும் தாயார் குற்றம் சாட்டியிருந்தார். 






சக நடிகர் கைது:


 இந்த வழக்கு தொடர்பாக சகீன் முகமது கான் கைது செய்யப்பட்டார். வாலிவ் பகுதி காவல் நிலையத்தில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


நடிகை துனிஷா வாழ்க்கை:


நடிகை துனிஷா ஷர்மா, பிரபல தொலைக்காட்சித் தொடர்களான 'சக்ரவர்தின் அசோக சாம்ராட்', 'பாரத் கா வீர் புத்ரா - மஹாராணா பிரதாப்' மற்றும் 'அலி பாபா தஸ்தான்-இ-காபூல்' போன்றவற்றில் நடித்ததால் பிரபலமடைந்தவர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன், துனிஷா தனது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் செட்டில் இருந்து பகிர்ந்துகொண்டார், "தங்கள் ஆர்வத்தால் உந்தப்படுபவர்கள் தடுக்க முடியாது" என்று எழுதினார்.


'ஃபிதூர்' மற்றும் 'பார் பார் தேக்கோ' ஆகிய இரண்டு படங்களிலும் இளம் கத்ரீனா கைஃப் கதாபாத்திரத்தில் துனிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.