பா.ஜ.க. ஆளும் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாக மத்தியப் பிரதேசம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகள் பாஜக ஆட்சிதான்.  பா.ஜ.க. ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 114 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் 109 இடங்களில் பாஜகவும் வெற்றிபெற்றது.


மத்திய பிரதேச அரசியல் சூழல்:


ஆனால், முதலமைச்சர் பதவியை பெறுவதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத், இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கிடையே தொடர் போட்டி நிலவி வந்தது. கமல் நாத்துக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் சிந்தியா அதிருப்தியில் இருந்து வந்தார்.


இறுதியில், சொந்த கட்சிக்கு எதிராக போர்க்கோடி தூக்கிய சிந்தியா, தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார். இதனால், ஆட்சி அமைத்த ஒரே ஆண்டில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று, ஆட்சி நடத்தி வருகிறார்.


மத்திய பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் இன்னும் 2 மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் நவம்பர் 17ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இச்சூழலில், ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?


தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 230 தொகுதிகளில் 113 முதல் 125 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆளுங்கட்சியான பாஜக, 104 முதல் 116 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.


முதலமைச்சராக யார் வேண்டும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் வர வேண்டும் என 35 சதவிகிதத்தினரும், பாஜகவின் மூத்த தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான சிவராஜ் சிங்கே முதலமைச்சராக தொடர வேண்டும் என 30 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இன்னும் 6 மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் இருக்கும் 29 தொகுதிகள் பாஜகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால், மத்திய பிரதேசத்தை பொறுத்தவரையில், சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரு மாதிரியும் மக்களவை தேர்தலுக்கு ஒரு மாதிரியும் அம்மாநில மக்கள் வாக்களித்து வருவது வழக்கமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மக்களவை தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதையும் படிக்க: Five State Elections: மக்களவை தேர்தலுக்கான செமி பைனல்.. ஐந்து மாநில தேர்தல் தேதியை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்