மத்திய பிரதேசத்தில் 2 வயது சிறுவனை பணிப்பெண் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாகரிக உலகில் வேலைப்பளு காரணமாக தாங்கள் பெற்ற குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியாத பெற்றோர், அவர்களை பார்த்துக்கொள்ள பணிப்பெண்களை நியமிக்கின்றனர். குழந்தைகளிடம் தங்களால் கொடுக்க முடியாத இடத்தை அவர்கள் கொடுப்பார்கள் என நம்பும் பெற்றோருக்கு, எல்லா பணியாளர்களும் அதைக் கொடுத்து விடுவதில்லை.
ஆம், அந்தக் குழந்தைகளின் சின்ன சின்ன சேட்டைகளை பொறுக்க முடியாத அவர்கள், அந்த பிஞ்சுகளை சரமாரியாக அடித்து துன்புறுத்துவது தொடர்பான சம்பவங்களை நாம் பல முறை கேள்விப்பட்டிருக்கிறோம். பார்த்து இருக்கிறோம்.. ஆனால் இது போன்ற சம்பவங்கள் இப்போதும் தொடர்ந்து வருகின்றன. ஆம் அதற்கு சான்றாகத்தான் தற்போது ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் வசித்து வரும் ஒரு தம்பதி தனது 2 வயது சிறுவனை பார்த்துக்கொள்ள கடந்த 4 நான்கு மாதங்களுக்கு முன்பு ரஜினி செளத்ரி என்ற பணிப்பெண்ணை நியமித்துள்ளனர். காலை 11 மணிக்கெல்லாம் வீட்டு வேலைகளை முடித்து, சமைத்துவிட்டு அலுவலகத்திற்கு அந்த தம்பதி கிளம்பி விட, மீத நேரத்தில் சிறுவனை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு ரஜினியிடம் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மகனுக்கு திடிரென்று நோய்வாய்ப்பட்டதை தொடர்ந்து, பெற்றோர் மகனை பரிசோதனைக்காக மருத்துவரிடம் அழைத்து சென்றனர். அப்போது சிறுவனை சோதித்த மருத்துவர் அவனுக்கு குடல் வீக்கம் இருப்பதாகவும், அவன் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமாரவை சோதனை செய்து பார்த்துபோது அதிர்ச்சியடைந்தனர். காரணம் பணிப்பெண்ணாக பணியாற்றிய ரஜினி அதில் சிறுவனை சரமாரியாக தாக்கியிருப்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து ரஜினி மீது காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், ரஜினியை கைது செய்து சட்டப்பிரிவு 308 இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.