மத்திய பிரதேச மாநிலம் திண்டோரில் பெரிய அளவிலான விபத்து ஒன்று ஏற்பட்டதில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
14 பேர் உயிரிழப்பு:
திண்டோரியில் உள்ள பர்ஜார் காட் என்ற இடத்தில் பிக்கப் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஷாபுரா சமூக சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிரேக் பழுதானதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நிவாரணம் அறிவிப்பு:
திண்டோரி மாவட்டத்தில் வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதனுடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த இடியை தாங்கும் சக்தியை அவர்களது குடும்பத்தினருக்கு கடவுள் வழங்க வேண்டும்.” என தெரிவித்தார்.
மறுபுறம், திண்டோரி விபத்துக்கு எம்பியும், காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “ திண்டோரில் பிக்கப் வாகனம் கவிழ்ந்து 14 பேர் உயிரிழந்ததாக மோசமான செய்தியை கேட்டேன். மேலும் இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.உள்ளாட்சி நிர்வாகம் நிவாரணம் மற்றும் சிகிச்சைக்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்தார்
விபத்து எப்படி நடந்தது..?
தகவலின்படி, இந்த சோகமான விபத்து திண்டோரியின் பட்ஜார் கிராமத்திற்கு அருகில் நடந்துள்ளது. பிக்கப் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. 14 பேர் உயிரிழந்ததை ஆட்சியர் விகாஸ் மிஸ்ரா உறுதி செய்துள்ளார். இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. பிரேக் செயலிழந்ததே விபத்துக்கான காரணம் என கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அப்பகுதி மக்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சவுக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பும் போது இந்த விபத்து நடந்துள்ளது. இறந்தவர்கள் தியோரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.