இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த  முதல் சர்வதேச கப்பல் பயணத்தை, இந்திய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கடந்த 5ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 


அதன்படி சென்னையில் இருந்து புறப்பட்ட எம்வி எம்பிரஸ் சொகுசுக் கப்பல் இன்று அதாவது ஜூன் 8ஆம் தேதி  திருகோணமலையை சென்றடைந்தது. இந்த கப்பல் திருகோணமலையை சென்று அடைய அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் செய்திருந்தார்.


இந்நிலையில் இன்று சொகுசு கப்பல் திரிகோணமலை வந்தபோது கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில், பிரதான செயலாளர், ஆளுநரின் செயலாளர், திருக்கோணமலை கிழக்கு கடற்படை கட்டளை தளபதி, பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பலர் ஆரவாரமாக வரவேற்றனர்.




மேலும் அதில் வருகை தந்த பயணிகளுக்கு, திருகோணமலையில்  காணப்படும் சுற்றுலா தளங்களை பார்வையிடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டன. 


 முதல் சர்வதேச பயணக் கப்பலை துவக்கி வைக்கும் போது மத்திய அமைச்சர் சென்னை துறைமுகத்தில் ரூ.17.21 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச கப்பல் சுற்றுலா முனையமும் திறந்து வைத்தார். இந்த முனையம் 2,880 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது மேலும் இதில் சுமார் 3,000 பயணிகள்  வரை தங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  


எம்வி எம்பிரஸ் கப்பலில் உள்ள டூர் பேக்கேஜ்கள் 2 இரவுகள், 3 இரவுகள், 4 இரவுகள் மற்றும் 5 இரவுகளுக்கு வழங்கப்படுகிறது. இது பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எனும் நோக்கில் இந்த மாதிரியான பேக்கேஜ்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 


இந்த கப்பல் அடுத்த நான்கு மாதங்களில் இந்தியாவில் இருந்து 50,000 பயணிகளை இலங்கைக்கு ஏற்றிச் செல்லும் என கோர்டெலியா தலைமை செயல் அதிகாரி ஜார்ஜன் பைலோம் தெரிவித்தார். கோர்டெலியா கொச்சி, கோவா, மும்பை மற்றும் லட்சத்தீவுகளுக்கு பயணக் கப்பல்களை இயக்குகிறது.


அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கூறியதாவது, 2023-ல் 208 ஆக இருந்த உல்லாசக் கப்பல்களின் அளவு 2030-ல் 500 ஆகவும், 2047-க்குள் 1,100 ஆகவும் உயரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். 


இதைத் தொடர்ந்து, கப்பல் சேவைகளைப் பெறும் பயணிகளின் எண்ணிக்கையும் 2030 இல் 9.50 லட்சத்தில் இருந்து 2047 இல் 45 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சோனோவால் கூறினார்.


"அந்தமான், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு சுற்றுவட்டங்களில் புதிய உல்லாச சுற்றுலா மைய்யங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் மியான்மர் முழுவதும் படகு சுற்றுலாவை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.


மேலும் அவர், “நாட்டின் மேற்கு, தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கப்பல் சேவைகளுக்கான தேவையை அதிகரிக்க, குஜராத்தில் புனித யாத்திரை, கலாச்சார மற்றும் இயற்கை சுற்றுலா மற்றும் ஆயுர்வேத ஆரோக்கிய சுற்றுலா மற்றும் பாரம்பரிய சுற்றுலா ஆகியவற்றை வெளியிடவும் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது” என்றார்.