நாடு முழுவதும் பரவி வரும் தோல் கழலை நோய் காரணமாக கால்நடைகள் இறந்து வருகின்றன. இதனால், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக, அதிக பாதிப்பை சந்தித்துள்ள ராஜஸ்தானில் 50,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன.


 






வைரஸால் ஏற்படும் இந்த நோயால் தோலில் கட்டிகள் உருவாகின்றன. மக்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இருக்காது. இது, ஈக்கள் அல்லது கொசுக்களால் பரவுகிறது. குஜராத்தின் கட்ச் பகுதியில் ஏப்ரல் மாதம் முதல் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ஜூலை மாதத்திலிருந்து இதுவரை 75,000 கால்நடைகள் இறந்துள்ளன.


ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் திகிலூட்டும் படங்கள், ட்ரோன் மூலம் எடுக்கப்பட்டு வெளியாகியுள்ளன. இதுவரை எட்டு மாநிலங்களில் இந்நோய் பரவியுள்ளது. ஜூலை முதல் இந்நோய் வேகமாகப் பரவி வருகிறது.


தோல் கழலை நோய் பற்றி முன்னதாக பேசிய பிரதமர், பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும், மேலும் உள்நாட்டு தடுப்பூசியையும் உருவாக்கி வருவதாகவும் கூறினார். 


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "சமீப காலமாக, இந்தியாவில் பல மாநிலங்களில் தோல் கழலை நோய் காரணமாக கால்நடைகள் பலியாகியுள்ளன. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் இணைந்து முயற்சித்து வருகின்றன. நமது விஞ்ஞானிகள் இந்நோய்க்கான உள்நாட்டு தடுப்பூசியையும் தயாரித்துள்ளனர்" என்றார்.


பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கு, தற்போதைக்கு 'ஆட்டு அம்மை தடுப்பூசி' போடப்பட்டு வருகிறது. தோல் கழலை நோய்க்கு எதிரான தடுப்பூசி "100 சதவீதம் பயனுள்ளதாக" இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ராஜஸ்தானில் இதுவரை 50,000 கால்நடைகள் பலி ஆகியுள்ளன. மாநிலத்தில் ஒரு நாளைக்கு 600-700 கால்நடைகள் இறப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர். மகாராஷ்டிரா சிறப்பு பணிக்குழுவை அமைத்து, ஜல்கான், அமராவதி போன்ற பகுதிகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க, பாதிக்கப்பட்ட கால்நடைகளை எவ்வாறு தனிமைப்படுத்துவதிலும், இறந்த கால்நடைகளின் உடல்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதிலும் கவனம் அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட கால்நடைகளில் காய்ச்சல் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுகின்றன. பாலை உற்பத்தி செய்வதில் பிரச்னை ஏற்படுகிறது. இவை அனைத்தும் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது.


இந்த நோய்க்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசி, மூன்று அல்லது நான்கு மாதங்களில் பயன்பாட்டுக்கு கிடைக்க உள்ளது.