பெரியம்மை நோய் :
ஆடு , மாடு போன்ற கால்நடை உயிரினங்களை தாக்கும் பெரியம்மை நோயின் தாக்கம் இந்தியாவில் தீவிரமாகியுள்ளது.lumpy skin disease என ஆங்கிலத்தில் அழைக்கப்படக்கூடிய இந்த நோய் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பசுக்கள் மற்றும் எருமைகள் குஜராத் மாநிலத்தில் உயிரிழந்துள்ளன. மேலும் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதேபோல ராஜஸ்தானிலும் பல கால்நடைகள் பாதிக்கப்பட்டிருப்பதால் , அவற்றை பாதுகாக்க மத்திய அரசு சிறப்பு குழு ஒன்றை அமைத்துள்ளது. குஜராத் மற்றும் ராஜஸ்தானுக்கு சிறப்பு குழுக்கள் அனுப்பப்பட்டு, நோயின் தீவிரம் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஒடிசாவில் தோன்றிய பெரியம்மை :
2019 செப்டம்பரில் ஒடிசாவில் முதன்முதலில் இந்த lumpy skin disease பதிவாகியுள்ளது. அதன் பின்னர், இந்த நோய் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மேலும் பதிவாகியுள்ளது.பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சத்தீஸ்கர், பீகார், ஜார்கண்ட், தெலுங்கானா, மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, அசாம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், குஜராத், மணிப்பூர், ஆந்திரப் பிரதேசம், கோவா, ஹரியானா, NCT-டெல்லி, ஹிமாச்சலப் பிரதேசம், அந்தமான் & நிக்கோபார் தீவுகள், ராஜஸ்தான் மற்றும் சமீபத்தில் பஞ்சாப் உள்ளிட்டவை அடங்கும்.
எப்படி பரவுகிறது ?
பெரியம்மை என்பது கால்நடைகளின் தோலை பாதிக்கும் ஒரு தொற்று ஆகும். இது கொசுக்கள், ஈக்கள், பேன்கள் மற்றும் குளவிகள் மூலம் மற்றும் அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரின் மூலம் பரவும் வைரஸ் நோயாகும்.
அறிகுறிகள் :
முதலில் காய்ச்சல், கண்கள் மற்றும் மூக்கில் இருந்து திரவம் வெளியேற்றம், வாயில் இருந்து உமிழ்நீர், உடல் முழுவதும் முடிச்சுகள் போன்ற மென்மையான கொப்புளங்கள், பால் உற்பத்தி குறைதல் மற்றும் சாப்பிடுவதில் சிரமம் போன்றவைதான் இதன் முக்கிய அறிகுறிகள். அறிகுறிகள் தீவிரமானால் சில நேரங்களில் இது விலங்குகளின் மரணத்திற்கு வழிவகுக்கும். அறிகுறிகள் தெரிந்தால் உடனே கால்நடை மருத்துவரை அனுகவும்.
குஜராத்தில் பெரியம்மை :
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 999 கால்நடைகள், குறிப்பாக பசுக்கள் மற்றும் எருமைகள் இந்த நோயால் உயிரிழந்துள்ளதாக குஜராத் அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.நோயைக் கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் மத்தியக் குழு குஜராத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தற்போது கால்நடைகள் தனிமைப்படுத்தப்பட்டு, தடுப்பூசி போடும் பணி முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் குறித்து எச்சரிக்கும் வகையில் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.