இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபய ராஜபக்ச நாடு திரும்புவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த அமைச்சர் கூறி இருப்பது தற்போது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிங்கப்பூரில் இருக்கும் கோத்தாபய ராஜபக்சவை அங்கிருந்து வெளியேறுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவே அறிய முடிகிறது. அதேபோல் அந்நாட்டு அரசும், அவரை குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியேறுமாறு கூறி அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் அவர் வேறு நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது .
தற்போது ,அவர் மீது பல்வேறு அழுத்தங்கள் சுமத்தப்படுவதால் மீண்டும் இலங்கைக்கு வரும் நோக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கோத்தபாயவை கைது செய்யுமாறும் சில வெளிநாட்டு அமைப்புக்கள்
கூறியிருக்கின்றன. இதனால் அவர் வேறு உலக நாடுகளுக்குச் சென்றால் அங்கு கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது . அதனால் அவர் மீண்டும் இலங்கை வரலாம் என தகவல்கள் வெளியாக இருக்கின்றன.
கோத்தாபய ராஜபக்ச தலைமறைவாக இல்லை எனக் கூறியுள்ள அமைச்சர் பந்துல குணவர்தன ,அவர் விசா பெற்று சென்றிருப்பதால் இலங்கைக்கு திரும்புவார் என செய்தியாளர் சந்திப்பில் ஆருடம் கூறியிருக்கிறார். முன்னாள் அதிபர் கோத்தபாய தலைமறைவாக இருக்கிறார் என்பதை தான் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என செய்தியாளர் சந்திப்பில் கூறி இருக்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன.
ஏனையவர்களை போன்று தான் கோத்தபாய ராஜபக்சவும் விசா அனுமதி மூலமாகவே தான் சிங்கப்பூருக்கு சென்றிருப்பதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார் அமைச்சர்.
தற்போது இலங்கையில் ராஜபக்சவினரின் நிழல் ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என மக்களாலும் ஏனைய கட்சியினாலும் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் ,அமைச்சர் அதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தும் வகையில் அவர் நிச்சயமாக திரும்பி வருவார் என கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோத்தாபய சிங்கப்பூரில் அடைக்கலம் கோரவில்லை எனவும் அவர் விசா அனுமதி பெற்றே அங்கு தங்கி இருப்பதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்திருக்கிறார்.
கோத்தாபய ராஜபக்சவை கைது செய்யுமாறு சிங்கப்பூர் தலைமை நீதிபதியிடம் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்திருக்கிறார்.முன்னாள் அதிபர் குறித்து எந்த விஷயங்களும் அமைச்சரவை கூட்டத்தில் பேசப்படவில்லை என பந்துல குணவர்தன தெரிவித்திருக்கிறார்.
இருந்த போதிலும் முன்னாள் அதிபர் என்ற வகையில் கோத்தபாய நாடு திரும்புவார் என தனக்கு தகவல் தெரிய வந்திருப்பதாக கூறியுள்ளார்.
அவர் நாடு திரும்புவதில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை சரி செய்து சிக்கல்கள் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுப்பார்கள் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே ராஜபக்ச குடும்பத்தினர் நாட்டை அழித்துவிட்டார்கள் என மக்கள் கொதித்து எழுந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் ,அவர் மீண்டும் இலங்கைக்கு வருவார் என்ற செய்தி மேலும் மேலும் மக்களின் கோபத்தை தூண்டி விடுவதாக அமைகிறது.
இருந்த போதும் தற்போது ராஜபக்ஷவினரின் நிழல் ஆட்சியாக கருதப்படும் ரணில் விக்ரமசிங்கவும் மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதால் ஆங்காங்கே பிரச்சனைகள் எழத்தான் செய்கின்றன.
மக்களுக்கான விலையேற்றத்தை குறைத்து ,உணவுக்கு வழிவகை செய்ய வேண்டியது தற்போது அரசின் முக்கிய கடமையாக இருக்கிறது .
அதை விடுத்து நாடாளுமன்ற அமைச்சரவை ,அமைச்சர்கள் பதவி என இன்னும் கட்சிக்குள்ளாக அடித்துக் கொண்டிருப்பதை உலக நாடுகள் உற்று நோக்கி கொண்டு தான் இருக்கின்றன .மக்களின் பணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அரசியல்வாதிகள், மக்களுக்கான சேவைகளை உடனடியாக தொடங்காமல், தமது அமைச்சரவையிலும் கட்சிப் பதவிகளிலும் முக்கிய கவனம் செலுத்துவது வேடிக்கையாகவே இருக்கிறது.
இவ்வாறான காரணங்களால் தான் முக்கியமாக இலங்கைக்கு நிதி உதவி செய்யும் உலக அமைப்புகளும், நாடுகளும் தற்போதும் மௌனம் காத்து வருவதாகவே சொல்லப்படுகிறது.
இன்றும் வழக்கம்போல் ரணில் விக்ரமசிங்க தான் பிரதமராக ஆட்சிக்கு வரும்போது அரசியலமைப்பில் தமக்கேற்றவாறு எவ்வாறு மாற்றங்களை செய்து கொள்வாரோ, அதே போல் 22 ஆவது திருத்தச் சட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தின் ஆட்சி காலத்தை நீட்டிப்பதற்கு தயாராகிக் கொண்டிருப்பதாகவே தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆகவே இலங்கை அரசியல் அமைப்பின்படி இடைக்கால அதிபர் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.அதனை விட்டு நாடாளுமன்றத்தின் ஆட்சிக் காலத்தை நீடிக்க அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
நாட்டு மக்கள் ஒரு வேளை உணவு கூட தற்போது போராடிக் கொண்டிருக்கும் நிலையில், ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக ராஜபக்சவினரின் நிழல் அரசியல் கட்டமைப்பு இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை காணமுடிகிறது