Lucknow Building Collapse : உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள வாசிர் ஹசன்கஞ்ச் சாலையில் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் நான்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது. இதனை அடுதது கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்பதற்காக தேசிய பரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றுடம் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகள் தொடக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் இந்த மீட்பு பணியில் இதுவரை சுமார் 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இடிபாடுகளுக்கு அடியில் இருந்து இன்று காலை மீட்கப்பட்ட ஹைதர் மற்றும் உஷ்மா ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த  சமாஜ்வாடி கட்சியன் தேசிய செய்தி தொடர்பாளர் அப்பாஸ் ஹைதரின் தாயும், மனைவியுமான பேகம் ஹைதர்(72),  உஷ்மா (35) என்று சொல்லப்படுகிறது. இதுவரை மீட்கப்பட்ட 16 பேரை தவிர, மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக டிஜிபி டிஎஸ் சவுகான் கூறுகையில், ”இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்திற்காக காரணங்கள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. கட்டடத்தின் வாகன நிறுத்துமிடத்தில் சில கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது" என்றார்.

விசாரணை குழு

இந்த சம்பவம் தொடர்பாக லக்னோ கோட்ட ரோஷன் ஜேக்கப், கூடுதல் போலீஸ் கமிஷனர் பியூஷ் மோர்டியா, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்துள்ளார். மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

3 பேர் மீது வழக்குப்பதிவு

இந்த சம்பவம் ஹல்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏவின் மகன் உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எம்.எல்.ஏ ஷாகித் மன்சூரின் மகனான நவாஜிஷ் ஷாஹித், முகமது தாரிக் மற்றும் ஃபஹத் யஸ்தான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதில் எம்.எல்.ஏவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 2 பேரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.