கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. 2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 11 மாதங்களே உள்ளன. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தென்னிந்தியாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறது பாஜக.


வடக்கு, மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் வலுவாக இருந்தாலும், கடந்த தேர்தலில் வெற்றிபெற்றது போல் இந்த முறை பாஜகவால் அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்ற முடியாது என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. எனவே, தென்னிந்தியாவில் தொகுதிகளை வென்று அதை ஈடுகட்ட பாஜக திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


அந்த வகையில், தென்னிந்தியாவில் அதிக தொகுதிகளை கொண்ட மாநிலமான தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பதிவு செய்ய பாஜக வியூகம் அமைத்துள்ளது. அதன்படி, தமிழ் மொழியின் பெருமையை பேசி தமிழ் மக்களிடையே சென்று சேர பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது பாஜக.


காசி தமிழ் சங்கமம்:


அதன் ஒரு பகுதியாக, காசி தமிழ்ச சங்கமம் நடத்தப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 


காசியில் நடைபெற்ற தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து சுமார் 2,500 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு வசதிகள் செய்து தரப்பட்டன. அத்துடன், அலகாபாத் மற்றும் அயோத்தியா பகுதிகளையும் அவர்கள் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.


இதனை தொடர்ந்து, வரும் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை, செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குஜராத்தின் செளராஷ்டிராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து குடிபெயர்ந்த செளராஷ்டிரா மக்களின் வாக்குகளை குறிவைத்து செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.


தவறாக மொழி பெயர்க்கப்பட்ட வார்த்தைகள்:


நிலைமை இப்படியிருக்க, செளராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் இணையதளத்தில் தமிழ் வாக்கியங்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டது குறித்து இணையத்தில் பதிவிட்டு விமர்சிக்கிறார்கள் நெட்டிசன்கள். தமிழ் மொழியை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் நிகழ்ச்சியின் இணையதளத்திலேயே வாக்கியங்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டது பல்வேறு விதமான விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது.


தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் பதிவு செய்து கொள்ளவும் இது தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளவும் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் இணையதளம் தொடங்கப்பட்டது.


அதில், Significance of Saurashtra Tamil Sangamam என்ற ஆங்கில வாக்கியம் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ”செளராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் முக்கியத்துவம்” என மொழி பெயர்த்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதில் ”செளராஷ்டிராவின் முக்கியத்துவம் தமிழ் சங்கமம்” என தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.


அதேபோல, Schedule of Saurashtra Tamil Sangamam என்ற ஆங்கில வாக்கியம் ”செளராஷ்டிரா அட்டவணை தமிழ் சங்கமம்” என தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த வாக்கியத்தை, ”செளராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் நிகழ்ச்சி நிழல் அல்லது செளராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் அட்டவணை” என்று மொழி பெயர்த்திருக்க வேண்டும்.