அகமதாபாத்தில் உள்ள ஜெகன்நாதர் ஆலயத்தில் உற்சவ மூர்த்திகள் வலம் வரும் தேரை, ஆயிரக்கணக்கான பகதர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.


ஜெகன்நாதர் தேரோட்டம்:


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜெகன்நாதர் ஆலயத்தில் நடைபெறும் தேரோட்டம் நூறாண்டுகளுக்கும் பழமையானது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறும் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். அந்த வகையில் நடப்பாண்டிற்கான தேரோட்ட திருவிழா உற்சாகமாக தொடங்கி நடபெற்று வருகிறது. 






வடம்பிடித்த பக்தர்கள்:


பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையை தொடர்ந்து நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தேரோட்டமாக, அகமதாபாத் ஜெகன்நாதர் ஆலாய தேரோட்டம் கருதப்படுகிறது. அந்த வகையில் விழா தொடங்குவதற்கு முன்பாக அந்த கோயிலில் மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா ஆரத்தி காட்டி வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, ஜெகன்நாதர், பாலபத்ர மற்றும் சுபத்ரா ஆகியோரின் உற்சவ சிலைகள் தேரில் வைக்கப்பட்டன. இதையடுத்து, கோயிலின் பாரம்பரிய முறைப்படி கலசி சமூகத்தை சேர்ந்த மக்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.


குவிந்த தலைவர்கள், பக்தர்கள்:


இந்த தேரோட்டத்தை காண கோயில் வளாகத்திலும், தேரோட்டம் நடைபெறும் சாலைகளின் இரண்டு புறமும் ஆயிரக்கணக்கான பகதர்கள் குவிந்திருந்தனர். மங்கள வாத்தியங்கள் முழுங்க, யான பரிவாரங்களுடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு இறைவழிபாட்டில் ஈடுபட்டனர். 12 மணி நேரம் நடைபெறும் இந்த தேரோட்டம் 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் செய்ய உள்ளது. இடையில் ஒரு மணி நேரம் மட்டும் மதிய உணவிற்கு இடைவெளி எடுத்துக்கொள்ளப்படும். 






நாடு முழுவதும் வழிபாடு:


இதேபோன்று ஜெகன்நாதர் ரத வழிபாடு இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு டெல்லியில் ஹவுஸ் காஸ் பகுதியில் உள்ள ஜெகன்நாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். இதேபோன்று   மத்திய அமைச்சர்களான தர்மேந்திர பிரதான் மற்றும் அஷ்வினி வைஸ்ணவ் ஆகியோர் ஒடிசா மாநிலம் பூரியில் வழிபாடு நடத்தினார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.