இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கல்வி ஆப் நிறுவனமாக பைஜூஸ் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. பைஜுஸ் நிறுவனம் பல்வேறு துணை நிறுவனங்கள் மூலமாக இணையவழி கல்வி சேவையை வழங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மார்க்கெட்டிங் மூலம் மிகப்பெரிய சந்தையை பைஜூஸ் பிடித்துள்ளது. இதனை உலகம் முழுவதும் விரிவுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது பைஜூஸ்.


தொடரும்  பணிநீக்க நடவடிக்கை:


இந்நிலையில், கடந்து ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு 2,500 ஊழியர்களையும், இந்த ஆண்டு 1,500 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்தது பைஜூஸ். மேலும் பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்படாது என்று சிஇஓ ரவீந்தரன் தெரிவித்திருந்த நிலையில், மேலும் ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது அந்நிறுவனம்.


இந்த முறை பைஜூஸ் நிறுவனத்தின் பல்வேறு துறை ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் உள்ள 280 சென்டர்களில் இருந்து விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் 1,000 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பல மூத்த மேலாளர்கள் மற்றும் உதவி பொது மேலாளர்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே இந்த பிரிவில் பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய ஊழியர்களின் சேர்க்கை காரணமாக நிறுவனத்தின் இறுதி பணியாளர் எண்ணிக்கை 50,000 ஆக உள்ளது.


தற்போது, மேற்கொள்ளப்பட்டுள்ள பணி நீக்க நடவடிக்கை தொடர்பாக பைஜூஸ் நிறுவனத்திடம் இ மெயில் மூலம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை அந்நிறுவனம் அதற்கு பதில் அளிக்கவில்லை. 


காரணம் என்ன..?


வருமானம் குறைந்ததோடு, பைஜூஸ் நிறுவனம் கடும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதும் பணி நீக்கத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வார தொடக்கத்தில் பைஜூஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய 1.2 பில்லியன் டாலர் கடனுக்கான காலாண்டு வட்டியை செலுத்த தவறியுள்ளதாக தெரிகிறது. கடன் வாங்கல், கொடுக்கல் தொடர்பான பிரச்சனையில் பைஜூஸ் நிறுவனம் சிக்கியள்ளதாக தெரிகிறது. இதனால் கடும் நிதி நெருக்கடியில் மாட்டிக் கொண்டு நீதிமன்றம் வரை சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மேலும், பைஜூஸ் நிறுவனம் கடந்த 2021ஆம் ஆண்டு திரட்டிய 1.2 பில்லியன் டாலன் மூலம் கடன் வழங்கி வந்த நிலையில், தற்போது அதனையும் நிறுத்துவதாக தெரிகிறது. பணம் தட்டுப்பாடு காரணமாக இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.


குகூள், மைக்ரோசாப்ட், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதனால், இந்தியர்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.