கல்லூரிக்கு வெளியே கத்திக்குத்து


ஜூன் 18ஆம் தேதி டெல்லியில் கல்லூரிக்கு வெளியே மாணவர்கள் சிலர் குத்தியதில், இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவர், 19 வயதான நிகில் சவுகான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், நிகில் சவுகானை கொலை செய்த 2 பேரை கைது செய்துள்ளனர்.   இவர்கள் டெல்லியின் பிந்தாபூர் பகுதியைச் சேர்ந்த ராகுல் மற்றும் ஜனக்புரியைச் சேர்ந்த ஹாரூன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில், கொலை செய்யப்பட்ட நிகில் சவுகானின் தந்தை இன்று செய்தியாளர்கள் முன்பு கதறி அழுந்துள்ளார். 


கதறி அழுத தந்தை


அப்போது அவர் பேசியதாவது, "ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் தனது மகன் கத்தியால் குத்தப்பட்டதாக தனக்கு அழைப்பு வந்தது. இது குறித்து செய்தி அறிந்ததும் நாங்கள் மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு எங்கள் மகன் இறந்துவிட்டதாக தெரிவித்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னால் இந்த துயரத்தை தாங்க முடியவில்லை” என்று கூறினார்.






மேலும், ”நிகில், மாடலிங் நிகழ்ச்சிக்காக விரைவில் மும்பை செல்ல திட்டமிட்டிருந்தார். நிகிலுக்கு மாடலிங் துறையில் மிகவும் ஆர்வம். நிகில் ஏற்கனவே இரண்டு பாடல்களில் நடித்துள்ளார். இதனால் அவருக்கு மற்றொரு வாய்ப்பிற்காக மும்பை வர கூறி அழைப்பு வந்தது. ஆனால் நிகிலுக்கு செமஸ்டர் தேர்வு இருந்ததால் நான் தேர்வு முடித்து வரச் சொன்னேன். ஆனால் இப்போ அதெல்லாம் முடிந்துவிட்டது” என்று நிகிலின் தந்தை சஞ்சய் சவுகான்  மனமுடைந்து பேசியுள்ளார்.


என்ன காரணம்?


டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆர்யபட்டா கல்லூரியில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓபன் லேர்னிங்கில் பிஏ (ஹான்ஸ்) அரசியல் அறிவியல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார் நிகில் சவுகான் (19). இவர் நேற்று மதியம் கல்லூரிககு வெளியே நின்றுக் கொண்டிருந்தபோது நான்கு மாணவர்கள் கொண்ட கும்பல் அவரை தாக்கியது. அவர் மார்பில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டதில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனைவில் உயிரிழந்தார். 


இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்பு நிகிலின் காதலியிடம் சில மாணவர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும், இதனால் அந்த மாணவர்களுக்கு நிகிலுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. காதலியிடம் தவறாக நடத்துக் கொண்டதால் நிகில் அவர்களை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த அந்த மாணவர்கள் நிகிலை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.