மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஒரு சம்பவம் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் அடங்காத நிலையில், மனித நேயத்தை கேள்விக்குள்ளாக்கும் பல சம்பவங்கள் மணிப்பூரில் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.


குறிப்பாக, பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வமாக அழைத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதே நாளில், மேலும் இரண்டு இளம் பெண்கள் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தின்போது, 800 பேர் சேர்ந்து ஒரு இளைஞரை அடித்து கொலை செய்துள்ளனர்.


முடங்கி போன நாடாளுமன்றம்: 


ஒட்டு மொத்த நாட்டின் கவனமும் மணிப்பூர் பக்கம் திரும்பியுள்ள நிலையில், நாடாளுமன்றத்திலும் மணிப்பூர் விவகாரம் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், மணிப்பூர் விவகாரத்தால் முடங்கி போயுள்ளது. மணிப்பூர் குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன.


அதேபோல, நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மணிப்பூர் குறித்து குறுகிய கால விவாதத்திற்கே மத்திய அரசு சம்மதித்துள்ளது. இதன் காரணமாக, நாடாளுமன்றம் முற்றிலுமாக முடங்கி போயுள்ளது. வழக்கமான அவை நடவடிக்கைகளை நடத்த முடியாமல் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரும் திணறி வருகின்றனர். 


பயங்கர அப்செட்டில் மக்களவை சபாநாயகர்!


10ஆவது நாளாக, மக்களவையும் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சியினரும் ஆளுங்கட்சியினரும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் மக்களவை சபாநாயகர் வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவை கண்ணியத்தை காக்கும் வகையில் அவர்கள் செயல்படும் வரையில், நாடாளுமன்ற கூட்டத்தில் சபாநாயகர் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.


குறிப்பாக, நேற்று பல்வேறு மசோதாக்கள் தாக்கலான போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் நடந்து கொண்ட விதம் மக்களவை சபாநாயகரை வருத்தத்தில் ஆழ்த்தியதாகக் கூறப்படுகிறது.  


மக்களவை இன்று கூடியபோது கூட சபாநாயகர் இருக்கையில் ஓம் பிர்லா காணப்படவில்லை. அவருக்கு பதிலாக பாஜக எம்.பி. கிரிட் சோலங்கியே, தற்காலிக மக்களவை சபாநாயகராக செயல்பட்டார். நாடாளுமன்றத்தில் அமளி தொடர்ந்ததால் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி சட்ட திருத்த மசோதா, 2023, இன்று விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டு, வாக்கெடுப்பில் விடப்படவிருந்தது. ஆனால், அவை ஒத்திவைக்கப்பட்டதால், வாக்கெடுப்பை நடத்த முடியவில்லை.


மக்களவை சபாநாயகர் வருத்தத்தில் இருப்பதாக ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.