பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்தில் அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், பிரமோத் குமார் மிஸ்ரா முதன்மை செயலாளராகவும் நீட்டிக்கப்பட்டுள்ளனர்.


பிரதமரின் முதன்மை செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்:


பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான பதவியாக , பிரதமரின் முதன்மைச் செயலாளர் பதவியும், தேசிய ஆலோசகர் பதவியும் பார்க்கப்படுகிறது. இந்த பதவிக்கு, பிரதமருக்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகளாக பார்க்கப்படுபவர்களான, பிகே மிஸ்ரா முதன்மை செயலாளராகவும், அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், இவர்களை நியமித்ததன் மூலம், இரண்டு அதிகாரத்துவ அதிகாரிகளும் பிரதமருக்கு நீண்ட காலம் பணியாற்றிய ஆலோசகர்களாக மாறியுள்ளனர்.


அஜித் தோவல்:


பிரதமர் ,மோடி 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற போது முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அஜித் தோவல், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 2019 ஆம் 2வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற போதும் மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், மீண்டும் பாதுகாப்பு ஆலோசராக நியமிக்கப்பட்டுள்ளார்.






தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பணியானது, கேபினட் அமைச்சர் பதவிக்கு இணையானதாக பார்க்கப்படுகிறது. மேலும், இவர்தான், இந்தியாவில் உள்ள அனைத்து உளவு அமைப்புக்கும் தலைவராவார். ரா, ஐ.பி. உள்ளிட்ட உளவு அமைப்புகள் இவரது கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்கும். 


கேரள மாநில ஐ.பி.எஸ் கேடர் அதிகாரியான அஜித் தோவல், ரா, ஐ.பி ஆகிய உளவு அமைப்புகளில் பணியாற்றியவர். பாகிஸ்தானில் சுமார் 7 ஆண்டுகள் முடி திருத்தம் உள்ளிட்ட வேலைகளை பார்த்துக் கொண்டே உளவுப் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.


 கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் சென்று தீவிரவாதிகளை தாக்கிய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்கும் அஜித் தோவலின் பங்கு மிகவும் முக்கியமானது. 


பி கே மிஸ்ரா:


முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான பிகே மிஸ்ரா,  2019 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்ற 2001 ஆம் ஆண்டில்,  முதல்வரின் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளராக மிஸ்ரா பணியாற்றியவர்.


முதலமைச்சராக மோடி இருந்த காலத்திலே மிகவும் நெருக்கமாக இருந்தவராக, மிஸ்ரா பார்க்கப்பட்ட நிலையில், பிரதமராக மோடி பதவியேற்ற  போதும், பிரதமரின் ஆலோசராக நியமிக்கப்பட்டார் மிஸ்ரா.


இந்நிலையில், பிரதமராக மீண்டும்  3வது முறையாக மோடி பதவியேற்ற நிலையில், மீண்டும் பிரதமரின் முதன்மைச் செயலாளராக பி.கே. மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 






இந்நிலையில் ,பிகே மிஸ்ரா மற்றும்  அஜித் தோவல் ஆகிய 2 பேரும் மீண்டும் நியமிக்கப்படுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.