மக்களவையில் அத்துமீறி நுழைந்த 2 நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மக்களவைக்கு வெளியேயும் 2 பெண்கள் அத்துமீறி போராட்டம் நடத்தினர். இதனால் 2 பெண்கள் உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளதாக சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து முழு விசாரணை நடத்தப்படும் எனவும் எத்தனை இடையூறு வந்தாலும் அவையை நடத்தி செல்வது நம் அனைவரின் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.  


கைது செய்யப்பட்ட அந்த பெண்கள் சர்வாதிகாரத்தை நிறுத்து... அடக்குமுறையை நிறுத்து என முழக்கமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டம் குறித்து அவர்கள் கூறும்போது “நாங்கள் எந்த அமைப்பையும் சார்ந்தவர்கள் அல்ல. இது அடக்குமுறைக்கு எதிரான போராட்டம். மணிப்பூருக்கு ஆதரவாக எழுந்த போராட்டம். பாரத் மாதாகி ஜே; வந்தே மாதரம்” எனத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் மக்களவையில் 2 பேர் அத்துமீறி நுழைந்தது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறுகையில், “மக்களவையில் அத்துமீறல் என்பது பாதுகாப்பு தோல்வியை காட்டுகிறது. 


கார்த்தி சிதம்பரம் கூறுகையில், "திடீரென்று 20 வயதுடைய இரு இளைஞர்கள் பார்வையாளர்கள் கேலரியில் இருந்து சபைக்குள் குதித்து கையில் டப்பாகளை வைத்திருந்தனர். இந்த டப்பாக்கள் மஞ்சள் புகையை உமிழ்ந்தன. அவர்களில் ஒருவர் சபாநாயகர் நாற்காலியை நோக்கி ஓட முயன்றார். அந்த இருவரும் “சர்வாதிகாரம் கூடாது” என சில கோஷங்களை முழங்கினர். இது 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் தாக்கப்பட்ட டிசம்பர் 13 ம் தேதியான இன்று, மீண்டும் இப்படி ஒரு செயல் நடந்திருப்பது கடுமையான பாதுகாப்பு மீறலாகும்.” எனத் தெரிவித்துள்ளார். 






இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதன் நினைவு தினமான இதே நாளில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது  வேதனைக்குரியது.


இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன், இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறுகையில், ”நாடாளுமன்றத்துக்குள் வண்ணப்புகைக் குப்பிகளுடன் நுழைய முடியும் போது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் ஆகியவற்றுடன் ஏன் நுழைய முடியாது? என்பது தான் முதன்மையான வினா ஆகும். புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்ட 3 மாதங்களுக்குள் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிடப்பட வேண்டும். பாதுகாப்பில் கோட்டை விட்ட அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற பார்வையாளர்கள் மாடத்திலிருந்து அவைக்குள் மிக எளிதாக குதிக்க முடியும் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவின் குடியரசுத் தலைவர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பணியாற்றக்கூடிய நாடாளுமன்றம் எந்தவித பாதுகாப்புக் குறைபாடும் இல்லாமல் இருக்க வேண்டிய அவசியம்” எனத் தெரிவித்துள்ளார். 


இந்த பாதுகாப்பு அத்துமீறலால் மக்களவை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களவைக்குள் நுழைந்து புகைக் குண்டுகளை வீசியவர்கள் மைசூரைச் சேர்ந்த பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரையின் பேரில் அனுமதிச் சீட்டினை வாங்கி வந்துள்ளனர் என கூறப்படுகின்றது. அதேநேரத்தில் மக்களவையில் நுழைந்து போராட்டம் நடத்தியவர்கள் விலைவாசி உயர்வு மற்றும் வேலை வாய்ப்பின்மையை குற்றம் சாட்டியே போராட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகின்றது.