இந்தியா மட்டும் இல்லாமல் உலக நாடுகளிலும் தலைப்புச் செய்தியில் இடம் பிடித்துள்ள நிகழ்வுதான் இந்திய பாராளுமன்ற மக்களவையில், பார்வையாளர்கள் வரிசையில் இருந்த இருவர் மக்கவை உறுப்பினர்கள் அமரும் இடத்தில் அத்துமீறி குதித்து புகைக் குண்டுகளை வீசியதுதான். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாராளுமன்றத்திற்கு வெளியேவும் இருவர் புகைக் குண்டுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், மணிப்பூர் விவகாரம் தொடர்பாகவும், வேலையின்மை, விலைவாசி உயர்வு குறித்து போராட்டங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை மாலை 4 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு அத்துமீறலினால் நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகின்றது. 22 ஆண்டுகளுக்குப் முன்னர் கடந்த 2001-ஆம் ஆண்டு மக்களவையில் இதே தினத்தில் ஒரு பாதுக்காப்பு அத்துமீறல் நடந்தது குறிப்பிடத்தக்கது. 


பாதுகாப்பு மீறல் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்திய பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், பார்வையாளர்கள் மக்களவை வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு ஐந்து நிலை பாதுகாப்புகளை எதிர்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் மக்களவை பார்வையாளர்கள் அறைக்கு வரமுடியும். மேலும் பார்வையாளர்கள் கேலரிக்கு ஒருவர் வரவேண்டும் என்றால் ஒரு மக்களவை உறுப்பினர் அல்லது மாநிலங்களவை உறுப்பினர் என யாரேனும் ஒருவரிடத்தில் கையொப்பம் பெறவேண்டும். இந்நிலையில் மக்களவைக்குள் புகைக் குண்டுகளை வீசியவர்கள் மைசூரைச் சேர்ந்த பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவிடம் அனுமதிச் சீட்டினை பெற்று மக்களவைக்குள் நுழைந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 




பாதுகாப்பு அடுக்குகள்



  • 2001 தாக்குதலுக்குப் பிறகு பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பயன்பாட்டில் இருந்த பாதுகாப்பு செயல்முறை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது அமலில் இருந்த மூன்றடுக்கு பாதுகாப்பு செயல்முறை நான்கு அடுக்கு பாதுக்காப்பாக மாற்றப்பட்டது.


 



  • டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவும், CRPF (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) குழுவும் நாடாளுமன்றத்தின் பாதுக்கப்பு பணியில் ஈடுபடுகின்றது. மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை மற்றும் தீயணைப்பு துறை உள்ளிட்ட பிற அமைப்புகளை உள்ளடக்கிய மற்ற பாதுகாப்பு அடுக்குகளும் பாராளுமன்றத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது. 


 



  • பாதுகாப்பு அடுக்குகளில் பார்வையாளர்களை சோதனை செய்தல் மற்றும் அவர்களின் உடமைகளை சரிபார்த்தல் ஆகியவை கட்டாயம் நடைபெறும்.  பார்வையாளர்களின் தொலைபேசிகள், பைகள், பேனாக்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் நாணயங்கள் கூட பாராளுமன்ற வளாகத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது, மேலும் அவர்கள் தங்கள் ஆதார் அட்டையையும் சோதனையின்போது பாதுகாப்பு அதிகாரிகளிடம் காட்ட வேண்டும். பார்வையாளர்கள் மூன்று முழு உடல் ஸ்கேனர்களையும் கடக்க வேண்டும். இந்த செயல்முறைக்குப் பிறகுதான், பார்வையாளர்களுக்கு பாஸ்கள் வழங்கப்படும்.


 



  • பாஸ்களை வழங்கும்போது பார்வையாளார்கள் குறித்த பின்னணி சரிபார்ப்பு கட்டாயம் நடைபெறும். பார்வையாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கையொப்பமிடப்பட்ட தங்கள் நுழைவை பரிந்துரைக்கும் கடிதங்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் காட்ட வேண்டும்.


 



  • மக்களவைக்குள் நுழைந்த இரண்டு பேரும் தங்கள் காலணிகளுக்குள் மஞ்சள் புகைக் குப்பிகளை மறைத்து வைத்திருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கின்றனர். அதேநேரத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் அவர்களை உடல்ரீதியாகப் பரிசோதிக்க தவறவிட்டிருக்க வேண்டும் என்றும் குற்றச்சாட்டு எழுப்பப்படுகின்றது. முழு உடல் ஸ்கேன் பரிசோதனையில் இருந்து அவர்கள் எவ்வாறு தப்பித்தார்கள் என்பது இன்னும் தெளிவாக யாருக்குமே தெரியவில்லை.