டெல்லி கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருந்த ஷ்ரத்தாவை காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டினார்.


இச்சம்பவம் தொடர்பாக, பல்வேறு விதமான பகீர் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. 


அப்தாப் அமீன் பூனவல்லா என்பவருக்கும் அவரது லிவ்-இன் காதலி ஷ்ரத்தாவுக்கும் கடந்த மே 18ஆம் தேதி சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்துள்ளார். பின்னர், அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை வைக்க குளிர்சாதன பெட்டியை வாங்கி உள்ளார். 


வேறு யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு உடல் பாகத்தையும் ஒவ்வொரு நாள் இரவு எடுத்து சென்று காட்டில் எறிந்துள்ளார். இதற்காக, தினமும் அதிகாலை 2 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி வெட்டப்பட்ட உடல் பாகங்களை அவர் அப்புறப்படுத்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.


இதற்கு மத்தியில், மெஹ்ராலி மற்றும் குருகிராம் காடுகளில் சில மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது. மண்டை ஓட்டின் அடிப்பகுதி, துண்டிக்கப்பட்ட தாடை பகுதி மற்றும் பல எலும்புகள் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை ஷ்ரத்தாவின் தந்தையின் டிஎன்ஏ மாதிரிகளுடன் பொருத்தி பார்க்க தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.


இதையடுத்து, நடத்தப்பட்ட டிஎன்ஏ சோதனையில் அந்த எலும்புகள் ஷ்ரத்தா உடையது என்பது தெரிய வந்துள்ளது. கண்டெடுக்கப்பட்ட எலும்புகளில் உள்ள டிஎன்ஏ மாதிரியும் ஷ்ரத்தாவின் தந்தையின் டிஎன்ஏ மாதிரியும் பொருந்தி போயுள்ளது. 


ஷ்ரத்தா தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் மறைத்ததாக அப்தாப் ஒப்புக்கொண்டிருந்தார். கொலை செய்த பிறகு வீட்டில் இருந்த ஷர்த்தாவின் புகைப்படங்களை அவர் அழித்தது விசாரணையில் தெரிய வந்தது.


அப்தாபின் சத்தர்பூர் குடியிருப்பில் இருந்து ஷ்ரத்தாவின் பையையும் போலீசார் மீட்டுள்ளனர். மேலும், அவரது சில ஆடைகள் மற்றும் காலணிகளைக் கண்டுபிடித்தனர்.


இதற்கு மத்தியில், தவறான தகவல்களை அளித்து காவல்துறை விசாரணையை திசை திருப்புவதாக காவல்துறை தரப்பு அப்தாப் மீது சந்தேகித்தது. எனவே, அவருக்கு உண்மையை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது. இதற்கு, தெற்கு டெல்லி நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது. 


விசாரணையின் தொடர்ச்சியாக நேற்று சிசிடிவி காட்சி வெளியாக அனைவரையும் பதற வைத்தது. அதில், அதிகாலை அப்தான் தனது வீட்டின் வெளியே ஒரு பையை தூக்கி செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி கடந்த மாதம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.