Jaishankar On Congress: மும்பை தாக்குதல் விவகாரத்தை காங்கிரஸ் விவாதித்து எதுவும் செய்ய வேண்டாம் என முடிவெடுத்தது என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.


”தெற்கு உலகின் குரல் இந்தியா”


இந்திய வழியில் வெளியுறவுக் கொள்கை: வேற்றுமையிலிருந்து நம்பிக்கைக்கு' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, ”காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்து விடுதலை பெற்றும் மீள முடியாமல் உள்ள சில நாடுகளை இந்தியாவை போன்று மீண்டும் கட்டியெழுப்பும் தார்மீகக் கடமை நமக்கு உள்ளது. 125 நாடுகளை உள்ளடக்கிய தெற்கு உலகின் குரலாக நாங்கள் இருக்கிறோம். இந்த நாடுகள் தங்களுக்கான நிலைப்பாட்டை எடுக்க இந்தியாவை நம்புகின்றன. 


காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு:


எல்லையில் இந்தியாவுக்கு சில சவால்கள் உள்ளன. அவற்றைப் பாதுகாப்பதற்கான திறவுகோல், பொதுவான நிலைப்பாட்டில் இருப்பது மட்டுமல்ல, உள்கட்டமைப்பை உருவாக்குவதும், ராணுவத்தை ஆதரிப்பதும், எல்லை அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போதெல்லாம் பதிலடி கொடுக்கும் அமைப்பை உருவாக்குவதுமே ஆகும். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை குறிப்பிட்டு, தற்காப்பு தசாப்தத்தில் தீவிரவாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தது” என ஜெய்சங்கர் குற்றம்சாட்டினார்.


”பாகிஸ்தானை தாக்காத இந்தியா”


தொடர்ந்து பேசுகையில், மும்பை தாக்குதலுக்குப் பிறகு, முந்தைய UPA அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியதாக சில தகவல்களையும் ஜெய்சங்கர் வெளியிட்டார். அதன்படி,  "நாங்கள் அமர்ந்தோம், நாங்கள் விவாதித்தோம், நாங்கள் அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலித்தோம். பின்னர் நாங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என முடிவு செய்தோம். பாகிஸ்தானை தாக்காமல் இருப்பதற்கான செலவை விட பாகிஸ்தானை தாக்கும் செலவு அதிகமாக இருப்பதாக உணர்ந்தோம் என்ற கருத்தின் அடிப்படையில், எதையும் செய்ய வேண்டாம் என முடிவு செய்தோம்" என அப்போதைய பாதுகாப்பு ஆலோசகர் பேசியதாக தெரிவித்தார்.


”இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை”


தீவிரவாதத்தை ஏற்றுக் கொள்வது என்ற கட்டுப்பாட்டை நாங்கள் கடந்தபோது, வெளியுறவுக் கொள்கையில் வேற்றுமையில் இருந்து நம்பிக்கையை நோக்கி நகர்ந்தோம். பாலகோட்டை தாக்கி பதிலடி தந்தபோது நாங்கள் அதை மிண்டும் உறுதி செய்தோம். முன்பு சமாளித்ததை விட இப்போது இந்தியா,  அமெரிக்காவை மிகவும் நம்பிக்கையுடன் கையாள்கிறத . பிரம்மோஸ் ஏவுகணைகள் ஏற்றுமதி என்பது, மேக் இன் இந்தியா மற்றும் பாதுகாப்பான நாடு எவ்வாறு ஒரு முக்கிய தொடர்பைப் பெற்றுள்ளது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது பிரம்மோஸிற்கு மட்டுமல்ல. மற்ற உபகரணங்களுக்கும் பொருந்தும். இது இந்தியா நுழையும் புதிய பகுதி என்று நான் நினைக்கிறேன். பிரதமர் நமது ராணுவ தளவாட உற்பத்தியாளர்களை மிகவும் வலுவாக ஊக்குவித்து வருகிறார். எனவே, நமது பாதுகாப்பு ஏற்றுமதிகள் வளர்ச்சியடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என ஜெய்சங்கர் பேசியுள்ளார்.