இந்தியாவில் 18வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்கியது. ஜூன் 1 ஆம் தேதியுடன் வாக்குப்பதிவு நிறைவடையவுள்ள நிலையில், ஜூன் 4-ஆம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளது.
ஆந்திர மாநில தேர்தல்:
ஆந்திர பிரதேச மாநிலத்தில் 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. அங்கு, மக்களவை தேர்தலானது மே மாதம் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆந்திராவில் வரும் 25 ஆம் தேதியுடன்( ஏப்ரல் 25 ) மனுதாக்கல் நிறைவடைகிறது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மனுதாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய கட்சிகளுக்கிடையிலான மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேச கட்சி சார்பில் போட்டியிடும் நபரின் மனுதாக்கலானது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால், அவர்தான் பணக்கார வேட்பாளராக உள்ளார்.
ரூ.5,785 கோடி சொத்து மதிப்பு:
அவர் யார் என்றால், குண்டூர் தொகுதியில் தெலுங்கு தேசக் கட்சியின் வேட்பாளர் பெம்மசானி சந்திரசேகர் என்பவர்தான். அவருக்கு கிட்டத்தட்ட ரூ. 5,785 கோடி மதிப்புள்ள குடும்பச் சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆந்திரப் பிரதேசத்தில் நடக்க உள்ள மக்களவை தேர்தலில் பணக்காரப் போட்டியாளராக மாறியுள்ளார்.
அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின்படி, அவரது தனிப்பட்ட சொத்துக்கள் ரூ.. 2,448.72 கோடியாகவும், அவரது மனைவிக்கு ரூ. 2,343.78 கோடியாகவும், குழந்தைகளிடம் ரூ. 1,000 கோடியாகவும் உள்ளது.
இருப்பினும், இவர்களின் குடும்பத்துக்கு, அமெரிக்காவின் ஜேபி மோர்கன் சேஸ் வங்கிக்கு ₹ 1,138 கோடி கடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களில் முதலீடுகள் மற்றும் பங்குகள் உள்ளன.
சந்திரசேகர் ஒரு மருத்துவர். அவர் 1999 இல் விஜயவாடாவின் என்டிஆர் ஹெல்த் சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் தனது எம்பிபிஎஸ் படிப்பும் மற்றும் 2005 இல் பென்சில்வேனியாவின் டான்வில்லில் உள்ள கீசிங்கர் மருத்துவ மையத்தில் எம்டி முதுகலை படிப்பும் முடித்துள்ளார்.