சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் ஆன பிறகும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அடிப்படை கட்டமைப்பு கூட இல்லாமல் இருப்பது பெரும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக,  ஜம்மு காஷ்மீர் போன்ற புவிசார் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் போதுமான அளவில் கூட பள்ளிக்கூடங்கள் இல்லாமல் இருப்பது பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளது.


இந்நிலையில், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சிறுமி பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது. தானும் தன்னுடைய நண்பர்களும் பள்ளியில் அசுத்தமான தரையில் உட்கார வேண்டிய நிலை இருப்பதாக சிறுமி சிரத் நாஸ் வீடியோவில் தெரிவித்துள்ளார்.


ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டம் லோஹே-மல்ஹர் கிராமத்தில் சிறுமி சிரத் நாஸ் வசித்து வருகிறார். தங்களுக்கு நல்ல பள்ளிக்கூடத்தை கட்டி தர வேண்டும் என பிரமதர் மோடிக்கு சிறுமி கோரிக்கை விடுத்திருப்பது அனைவரின் மனதையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


சிறுமியின் வீடியோ, 'மார்மிக் நியூஸ்' என்ற பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவை 2 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 1,16,000 பேர் லைக் செய்துள்ளனர். 5 நிமிட வீடியோவின் தொடக்கத்தில் தன்னை அரசு பள்ளி மாணவி என அறிமுகம் செய்து கொள்கிறார் சிரத் நாஸ்.


பின்னர், அந்த வீடியோவில் தன்னுடைய பள்ளிக்கூடத்தை சுற்றி காண்பிக்கிறார். இதன் மூலம், பள்ளியில் பல்வேறு விதமான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதை வீடியோ மூலம் தெரிவிக்கிறார் சிறுமி சிரத் நாஸ்.


"மோடி, நான் உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன்" என கூறிவிட்டு, முதல்வர் அலுவலகம் மற்றும் ஆசிரியர் அறை ஆகியவற்றை வீடியோவில் காண்பிக்கிறார்.


"தரை எவ்வளவு அழுக்காக இருக்கிறது என்று பாருங்கள். எங்களை இங்கே உட்கார வைக்கிறார்கள். எங்கள் பள்ளி இருக்கும் பெரிய கட்டிடத்தை பாருங்கள். கடந்த 5 ஆண்டுகளாக கட்டிடம் எவ்வளவு அசுத்தமாக உள்ளது பாருங்கள். கட்டிடத்தின் உள்ளே எப்படி இருக்கிறது என்பதை பார்க்க உங்களை அழைத்துச் செல்கிறேன்.


எங்களுக்காக ஒரு நல்ல பள்ளியை கட்டித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். தற்போது நாங்கள் தரையில் உட்கார வேண்டியுள்ளது. இதனால் எங்கள் சீருடைகள் அழுக்காகின்றன. 


சீருடைகள் அழுக்காகிவிட்டன என்று எங்கள் தாய்மார்கள் எங்களை அடிக்கடி திட்டுவார்கள். எங்களுக்கு உட்கார பெஞ்சுகள் இல்லை. தயவு செய்து மோடி, பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து என் விருப்பத்தை நிறைவேற்றுங்கள்" என சிரத் நாஸ் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து பேசிய சிறுமி, "மோடி, நீங்கள் ஒட்டுமொத்த தேசம் சொல்வதையும் கேட்கிறீர்கள். தயவு செய்து நானும் சொல்வதைக் கேட்டு எங்களுக்கு ஒரு நல்ல பள்ளியை உருவாக்குங்கள். நாங்கள் தரையில் உட்காராத வகையில் பள்ளி இருக்க வேண்டும். அதனால் எல்லோரும் நன்றாகப் படிக்கலாம். எங்களுக்காக ஒரு நல்ல பள்ளியை உருவாக்குங்கள்" என்றார்.