ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், ஏற்கனவே விபத்து காரணமாக பதவியை ராஜினாமா செய்த ரயில்வே அமைச்சர்களின் விவரங்களை அறியலாம்.


ஒடிசா விபத்து:


ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், விபத்து நிகழ்ந்த சம்பவ இடத்திற்கு பிரதமர் மோடி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.  நடப்பு நூற்றாண்டின் மிக மோசமான சம்பவமாக கருதப்படும், இந்த நிகழ்வு தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த விபத்திற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், இந்திய வரலாற்றில் ஏற்கனவே ரயில் விபத்துகள் காரணமாக ரயில்வே அமைச்சர் பதவியை இழந்தவர்களின் விவரங்களை இங்கு அறியலாம்.


01. லால் பகதூர் சாஸ்திரி:


1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாட்டில் உள்ள அரியலூர் பகுதியில் நடந்த ரயில் விபத்தில் 142 பேர் உயிரிழந்தனர். இதற்கு பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.  அவரது இந்த செயல் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் பாராட்டுகளைப் பெற்றது. அவரது நேர்மையைப் பிரதமர் பாராட்டியதோடு, அடுத்தடுத்து அமைச்சர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டார்.  இறுதியில் இந்தியாவின் பிரதமராக தேர்வானார் லால் பகதூர் சாஸ்திரி.


02. நிதிஷ் குமார்:


லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகி 43 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்தவர், தற்போதையை பீகாரின் முதலமைச்சராக உள்ள நிதிஷ் குமார் தான். 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அசாமில் கெய்சல் பகுதியில் நேர்ந்த விபத்தில் 290 பேர் உயிரிழந்தனர். இதற்கு பொறுப்பேற்று நிதிஷ்குமார் தனது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.


03. மம்தா பானர்ஜி:


கடந்த 2000-ஆவது ஆண்டில் அடுத்தடுத்து நேர்ந்த இரண்டு ரயில் விபத்துக்களுக்கு தார்மீக பொறுப்பேற்று, அப்போதைய ரயில்வே அமைச்சரான மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அவரது ராஜினாமாவை அப்போதைய பிரதமர் அடல் பிகார் வாஜ்பாய் நிராகரித்து விட்டார்.


04. சுரேஷ் பிரபு:


2017 ஆம் ஆண்டில், கைஃபியத் விரைவு ரயில் மற்றும் பூரி-உத்கல் விரைவு ரயில் ஆகியவை வெறும் நான்கு நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து தடம் புரண்டன. இதற்கு பொறுப்பேற்று கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதியன்று அப்போதைய ரயில்வே அமைச்சரான சுரேஷ் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்தார்.  ஆனாலும்,  காத்திருக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். இருப்பினும் ஒருமாதம் கழித்து சுரேஷ் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்தார்.


05. மது தந்தவடே:


மூத்த அரசியல் தலைவரான மது தந்தவடே 1977 முதல் 1979 வரை நிதியமைச்சராக, இருந்தபோது ரயில்வே துறையில் பல்வேறு முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தார். தொடர்ந்து, 1979ம் ஆண்டு ஏற்பட்ட பெரிய ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று மது தந்தவடே தனது பதவியை ராஜினாமா செய்தார்.