காந்திஜியின் தீவிர தொண்டர் என்று பெயர் எடுத்தவர் மொரார்ஜி தேசாய். அவர் நமது நாட்டின் நிதி அமைச்சராக இருந்தபோது ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்யும் ஆணையை நேரடியாகப் பிறப்பித்து, அகில இந்தியாவையே அதிர வைத்தவர்.
1975 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது, நமது நாட்டில் அவசர நிலைச் சட்டத்தைப் பிரகடனம் செய்தார். வரலாறு இந்த அவசரநிலைத் தருணங்களை இருண்ட காலம் என்று பதிவு செய்திருக்கிறது.
1977 ஆம் ஆண்டு அவசரநிலைச் சட்டம் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது. அவசர நிலை காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் (மெயின்டனன்ஸ் ஆப் இன்டெர்னல் செக்யூரிட்டி ஆக்ட் ) பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டுடன் பரபரப்பான அரசியல் களம் கண்டு வந்த இவர்களெல்லாம் கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
ஒவ்வொரு தலைவருக்கும் என தனித்தனியே குணாதிசயங்களும் அடையாளங்களும் உண்டு. ஒரே அமைப்புக்குள் தனித்தனி சித்தாந்தங்களோடு ஒற்றுமைப்படாமல் முட்டி மோதிக் கொள்ளும் பண்பு நலன் படைத்தவர்கள் அவர்கள்.
ஆனால் அவசரநிலைக் காலத்து அதிரடிகளும், சிறைவாசத்துச் சிந்தனைகளும் அவர்களுடைய அனைத்து வேற்றுமையும் வெறுத்து ஒதுக்கி விட்டு, ஓரணியில் திரளக் கூடிய வாய்ப்பை உண்டாக்கி தந்து விட்டன.
முழுப் புரட்சி இயக்கம் என்ற பெயரில் பெரும் போராட்டத்தை பீகாரில் இருந்தபடி நடத்தி வந்தவர் முதுபெரும் காந்தியவாதியான ஜெயப்ரகாஷ் நாராயணன். இந்திய ராணுவத்தையே இந்திரா காந்திக்கு எதிராகத் திருப்பி விடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டவர் தான் ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்கிற ஜே பி. அவரும் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அந்த காலகட்டத்தில் இருந்த காந்தியவாதிகளில் மூத்தவர்.எந்தவித தன்னலமும் இல்லாதவர்கள். எனவே விடுதலையான அனைவரும் திரண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையின் கீழ் ஒன்று சேர்ந்தனர். அவசரம் அவசரமாக காங்கிரசுக்கு எதிரான அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்தனர். ஜனதா என்ற பெயரில் ஒருங்கிணைந்த அந்தக் கட்சிகளுடன், அப்போதைய ஜன சங்கம் கட்சியும் இரண்டரை கலந்து விட்டது தான் ஆச்சரியம். ஆனாலும் அது தாமரை இலைத் தண்ணீர் போன்றே இயங்கியது.
கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஜனதா கட்சியுடன் உடன்பாடு கொண்டிருந்தாலும் கூட அவை கட்சிக்குள் இணையாமல் ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணிக்குள் ஓரங்கம் என்று தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டன.
1977 ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி நாடெங்கும் பரபரப்பாகக் களமாடியது. வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கான சாதனையை எட்டியது. தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வென்றது. அதற்குக் காரணம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த எம்ஜிஆர் என்ற மந்திர சக்தி தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
டில்லியில் ஆட்சியமைக்க இருந்த நிலையில் கட்சியின் சார்பில் பிரதமருக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் நெருங்கியது. அதற்குப் பலத்த போட்டி நிலவியது.
மொரார்ஜி தேசாய் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு, முட்டி மோதினார். ஜெகஜீவன் ராம் ஒருபுறம் சரண்சிங் மறுபுறம் என வெளிப்படையாகக் களமாடினர். மற்றவர்களுக்கும் இந்த ஆசை இருந்தாலும் கூட இந்த மூன்று பேரின் போட்டி -பூசல் காரணமாக, மனக்கணக்கை மறைத்து வைத்துக் கொண்டனர்.
மிகப் பெரும் சர்ச்சைகள் எழுந்த பின்னர், ஒருவழியாக அனைவரையும் அமைதிப்படுத்திய ஜெயப்பிரகாஷ் நாராயணன், முடிவாக மொரார்ஜி தேசாயை அறிவித்தார். கனத்த மனத்தோடு அவர்கள் அவரை ஏற்றுக் கொண்டனர். தேசாய் பிரதமர் ஆனார். நாடெங்கும் காந்தியவாதிகள் கொண்டாடித் தீர்த்தனர்.
நாட்டின் உச்சபட்ச நிர்வாகப் பொறுப்பில் இருந்த மொரார்ஜி தேசாயை விழாக்கள் வாயிலாக நாடெங்கும் தொண்டர்கள் களைகட்டினர்.
இந்த நிலையில் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வந்தது. நாடெங்கும் இருந்த ஜனதா கட்சித் தொண்டர்களுக்கு ஒரே குழப்பம். மொரார்ஜி தேசாய் பிறந்ததோ பிப்ரவரி 29ஆம் தேதி. அவரின் பிறந்த நாளை, பிப்ரவரி 28ஆம் தேதி கொண்டாடுவதா...மார்ச் ஒன்றாம் தேதி கொண்டாடுவதா என்பதில் ஏகப்பட்ட சர்ச்சை. லீப் வருடத்தில் வரும் பிப்ரவரி 29-ஆம் தேதி தேசாய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பல பேர் பிப்ரவரி 28ஆம் தேதி மற்றும் மார்ச் ஒன்றாம் தேதி என இரு நாட்களிலும் விழாக்கள் எடுத்து, தங்கள் கடமையைக் காட்சிப்படுத்திக் காட்டினர். நாடெங்கும் இருந்த தலைவர்கள் தங்கள் பிறந்த நாட்களை ஆண்டுதோறும் கொண்டாடிக் களித்து வருகின்ற சூழ்நிலையில், மொரார்ஜி தேசாய் மட்டும் ஏக்கத்தோடு பார்த்துச் சகித்துக் கொள்ள வேண்டிய நிலையில் தான் இருந்தார்.