திறந்த கிணறுகளில் விலங்குகள் விழுவது ஒன்றும் புதிதல்ல. இதையடுத்து, விலங்குகள் கிணற்றில் விழுவதை தவிர்க்கும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் இந்திய வனப் பணி அலுவலர் ஒருவர் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். திறந்த கிணற்றில் விழுந்த சிறுத்தையை மீட்பது அதில் பதிவாகியுள்ளது.
கிணற்றில் விழுந்த சிறுத்தையை கட்டில் மூலம் வெளியே எடுப்பதும் மீட்டவர்கள் பதறி ஓடுவதும் வீடியோவில் காணலாம். இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த வனப்பணி அலுவலர் சுஷாந்த நந்தா, "இம்மாதிரியான கிணறுகளை மூடும் பட்சத்தில் விலங்குகள் கிணறுகளில் விழுவது தவிர்க்கப்படும்" என பதிவிட்டுள்ளார்.
சிறுத்தையை மீட்க பயன்படுத்திய முறை மொகஞ்சதாரோ ஹரப்பா காலத்தில் பயன்படுத்திய முறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது குறித்து தெரியவில்லை. இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டதிலிருந்து, 43,000 பேர் பார்த்துள்ளனர்.
வனத்துறையினரின் முயற்சியை சமூகவலைதள பயனாளிகள் பாராட்டி வரும் அதே வேலையில், குழந்தைகள் மற்றும் பிற வனவிலங்குகள் கிணற்றில் விழுவதை தவிர்க்கும் வகையில் கிணறுகளை மூட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையில், இந்த மாத தொடக்கத்தில், கிணற்றில் விழுந்த சிறுத்தை மீட்கப்பட்டதைக் காட்டும் மற்றொரு வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியிருந்தது. ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது. மீட்பு பணியை மாநில தீயணைப்பு துறை நடத்தியது.