வாசனைத் திரவியத் தயாரிப்பு நிறுவனமான லேயர்’ர் கடந்த ஜூன் 6 அன்று சர்ச்சைக்குரிய விளம்பரங்களைக் குறித்து மன்னிப்பு கோரி செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், இந்த விளம்பரங்களை ஒளிபரப்புவதற்கு முன்பு அனைத்து ஒப்புதல்களையும் பெற்றதாகவும் லேயர்’ர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து லேயர்’ர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `நாங்கள் யாருடைய மனதையும் புண்படுத்துவதையும், உணர்ச்சிகளைத் தூண்டுவதையும், பெண்களின் கண்ணியத்தைக் கெடுக்கவும், அதுபோன்ற கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டு செயல்படவில்லை’ எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த விளம்பரங்களுக்காக மன்னிப்பு கோரியுள்ள லேயர்’ர் நிறுவனம் அனைத்து தொலைக்காட்சி, இணையதளம் பார்ட்னர்களிடமும் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளதாகவும், வரும் ஜூன் 4 முதல் ஒளிபரப்பு நிறுத்தப்படும் எனவும் கூறியுள்ளது.
பெண்கள் இருக்கும் இடங்களில் உரையாடல் மேற்கொள்ளப்பட்டு, இரட்டை அர்த்தம் பொருந்தியதாக வைக்கப்பட்டிருந்த இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சையை எதிர்கொண்டது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொறுப்பாளர் ருசித்ரா சதுர்வேதி, `இந்த விளம்பரம் அறுவெறுப்பானது மட்டுமின்றி, பெண்களுக்கு எதிராக இருக்கிறது. பெண்களின் அச்சங்களை வைத்து விளையாடி விளம்பரங்களை உருவாக்குவது சரியா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஜூன் 4 அன்று, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ட்விட்டர், யூட்யூப் முதலான நிறுவனங்களுக்கு எழுதிய கடிதத்தில் இந்த விளம்பரம் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021 அளித்துள்ள விதிமுறைகளை மீறியுள்ளதாகத் தெரிவித்திருந்தது. மேலும், அந்தக் கடிதத்தில், `ஒரு நிறுவனத்தின் விளம்பரமான அந்த வீடியோவைப் பல்வேறு பயனாளர்கள் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்’ எனக் கூறப்பட்டிருந்தது.
`தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021 விதிமுறைகளின் அடிப்படையில் இந்த வீடியோ பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கும் விதமாக இருப்பதால் அதனை நீக்க வேண்டும்’ என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய விளம்பரங்கள் தரக் கட்டுப்பாட்டு கவுன்சில் சார்பிலும் இந்த வீடியோ விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் பொது நலனுக்கு எதிராக இருப்பதாகவும், அதனால் அது நீக்கப்பட வேண்டும் என்றும் செய்திக் குறிப்பில் கூறியிருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்