நீதிபதிகளை நியமிக்கும் தற்போதைய கொலிஜியம் அமைப்பு வெளிப்படை தன்மையற்று இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். தகுதி வாய்ந்தவர்கள் மட்டுமே நீதிபதியாக வேண்டும். கொலிஜியம் அமைப்பிற்கு தெரிந்தவர்கள் அல்ல என அவர் பேசியுள்ளார்.


நீதித்துறையில் தீவிரமான அரசியல் இருப்பதாகவும் ஆனால், அதை நீதிபதிகள் காட்டி கொள்வதில்லை என்றும் கொலிஜியம் அமைப்பு குறித்து மத்திய அமைச்சர் ரிஜிஜு பேசியுள்ளார். பிரபல செய்தி நிறுவனமான இந்தியா டூடே நடத்திய மாநாட்டில் ,"நீதித்துறையில் சீர்திருத்தம்" என்ற தலைப்பில் அமைச்சர் பேசினார்.


அப்போது, நீதித்துறை மீது பகிரங்க குற்றச்சாட்டு சுமத்திய அவர், "நான் நீதித்துறையையோ அல்லது நீதிபதிகளையோ விமர்சிக்கவில்லை. உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் தற்போதைய அமைப்பில் நான் மகிழ்ச்சியடையவில்லை. எந்த அமைப்பும் சரியாக இல்லை. நாம் எப்போதும் பாடுபட வேண்டும். ஒரு சிறந்த அமைப்பை நோக்கி உழைக்க வேண்டும்.


 






அமைப்பு பொறுப்பாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். அமைப்பு, வெளிப்படை தன்மையற்று இருந்தால், சம்பந்தப்பட்ட அமைச்சர் பேசாமல் அதற்கு எதிராக வேறு யார் குரல் கொடுப்பார்கள். வழக்கறிஞர் சமூகம் மற்றும் சில நீதிபதிகள் உள்பட மக்களின் சிந்தனையைதான் பிரதிபலிக்கிறேன். தற்போதைய கொலிஜியம் அமைப்பின் அடிப்படையே தவறு. 


என்னவென்றால், நீதிபதிகள் தங்களுக்குத் தெரிந்த சக ஊழியர்களை பரிந்துரைப்பதுதான். வெளிப்படையாக, அவர்கள் தங்களுக்குத் தெரியாத நீதிபதியை பரிந்துரைப்பதில்லை. தகுதி வாய்ந்தவர்கள் மட்டுமே நீதிபதியாக வேண்டும். கொலிஜியம் அமைப்பிற்கு தெரிந்தவர்கள் அல்ல" என்றார்.


நீதிபதிகளை நியமிப்பதில் அரசு சம்பந்தப்பட்டிருந்தால் செயல்முறை எவ்வாறு வித்தியாசமாக இருக்கும் என்று கேட்கப்பட்டதற்கு, "தகவல்களைச் சேகரிப்பதற்கும் உரிய முயற்சியை மேற்கொள்வதற்கும் அரசாங்கத்திற்கு ஒரு சுயாதீனமான பொறிமுறை உள்ளது. அரசாங்கம் ஒரு முடிவை எடுப்பதற்கு முன் உளவுத்துறை மற்றும் பல அறிக்கைகளை நம்பியிருக்க வேண்டும். நீதித்துறைக்கோ அல்லது நீதிபதிகளுக்கோ அது கிடையாது.


உலகம் முழுவதும், அரசாங்கங்கள்தான் நீதிபதிகளை நியமிக்கின்றன. இதன் காரணமாக, நீதித்துறையிலும் அரசியல் உள்ளது. அவர்கள் (நீதிபதிகள்) அதை வெளி காட்டி கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், தீவிர அரசியல் உள்ளது. நீதிபதிகள் இதுபோன்ற நிர்வாகப் பணிகளில் சிக்கிக் கொள்ள வேண்டுமா? அல்லது நீதி வழங்குவதில் அதிக நேரம் செலவிட வேண்டுமா? " என ரிஜிஜு கூறினார்.


தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்தது குறித்து பேசிய அவர், "இந்த விவகாரத்தில் அரசு எதுவும் சொல்லவில்லை. நிராகரித்த போது, ​​அரசு ஏதாவது செய்திருக்கலாம். ஆனால், நீதித்துறையை மதிப்பதால் அதை செய்யவில்லை. ஆனால், நாம் எப்போதும் அமைதியாக இருப்போம் என்று அர்த்தமல்ல" என்றார்.