HP Election 2022: ஒவ்வொரு வாக்கும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இமாச்சல பிரதேச மாநிலத்தின் வளர்ச்சியை வரையறுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பவர் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில் பாஜக சார்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மண்டி மாவட்டத்தில் உள்ள சுந்தர் நகரில் பேரணியில் ஈடுபட்டார். இதில் திரளான பாஜகவினர் கலந்து கொண்டனர்.
இமாச்சலப் பிரதேச தேர்தல்
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 2023ம் ஆண்டு, ஜனவரி 8ம் தேதியோடு முடிவடைகிறது. கடந்த அக்டோபர் 20ஆம் தேதி, அதற்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, வரும் நவம்பர் 12ம் தேதி ஒரே கட்டமாக இமாச்சலப் பிரதேச தேர்தல் நடத்தப்படுகிறது. அதற்கான முடிவுகள், டிசம்பர் 8ஆம் தேதி அன்று அறிவிக்கப்படுகிறது.
இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. 68 உறுப்பினர்கள் உள்ள சட்டபேரவையில், தற்போது பாஜகவுக்கு 43 உறுப்பினர்களும், காங்கிரஸுக்கு 22 உறுப்பினர்களும் உள்ளனர். இரண்டு சுயேச்சைகள் மற்றும் ஒரு சிபிஐ (எம்) எம்எல்ஏ உள்ளனர்.
”தேர்தல் சிறப்பு வாய்ந்தது”
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி நகரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, "இந்த முறை இமாச்சல பிரதேசத்தின் சட்டமன்ற தேர்தல் சிறப்பு வாய்ந்தது. இந்த நிலையில் நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இமாச்சல பிரதேசத்தின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கானவை என தெரிவித்தார்.
மேலும் ”பாஜக என்றால் நிலையான அரசு. வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய அரசு என்பதை மக்கள் அறிந்திருக்கிறார்கள். இந்த மாநிலத்தில் மீண்டும் பாஜக அரசை அமைய வேண்டும் என மக்கள் முடிவு எடுத்துவிட்டார்கள்” என தெரிவித்தார்.
"நாட்டின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் எதிரானது”
”காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை, நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது. பொய் வாக்குறுதிகளை கொடுப்பது தான் காங்கிரஸின் வாடிக்கை. மக்களை ஏமாற்றுவதே காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால உத்தியாக உள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி ஒருபோது முன்னுரிமை கொடுத்தது இல்லை. ஆனால் பாஜக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றி இருப்பதாக" பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.