பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியாமா, இல்லையா என்பது குறித்து ஜுலை 14ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.


பொது சிவில் சட்டம் - கருத்து கேட்பு


நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று 22வது சட்ட ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளின் விரிவான எண்ணங்கள் தொடர்பாக அறிய இந்திய சட்ட ஆணையம் முடிவு செய்துள்ளது. விருப்பமுள்ள நபர்கள் வரும் ஜுலை 14ம் தேதி வரையில் membersecretary-lci@gov.in எனும் முகவரிக்கு மெயில் மூலமாக தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். அதுமட்டுமல்லாமல், 'உறுப்பினர் செயலர், இந்திய சட்ட ஆணையம், 4-வது தளம், லோக் நாயக் பவன், கான் மார்க்கெட், புதுடெல்லி-110 003' என்ற முகவரிக்கும் தபால் மூலம் கருத்துகளை அனுப்பிவைக்கலாம்.ஏற்கெனவே கருத்துக் கேட்பு நடந்து 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் புதிதாக கருத்துகள் கேட்கப்படுகின்றன. ஏனெனில் பொது சிவில் சட்டம் தொடர்பாக இந்த 3 ஆண்டுகள் இடைவெளியில் பல்வேறு நீதிமன்றங்களில் பல வழக்குகள் விசாரித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதனால் புதிதாக கருத்து கேட்கப்படுவது அவசியமாகிறது” சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. 


எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு:


இந்த சூழ்நிலையில் பொதுசிவில் சட்டம் தொடர்பாக விவாதிப்பதற்காக, சட்டம் மற்றும் நீதிக்கான பாராளுமன்ற நிலைக் குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, அதிமுக, உள்பட நாட்டின் பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன. பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக கட்சிகளிடம் ஆலோசித்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தன. பொது சிவில் சட்டம் தேவையில்லை என 21வது சட்ட கமிஷன் கூறிய நிலையில், மத்திய அரசு அதை கொண்டு வருவதற்கான நோக்கம் என்ன? என காங்கிரஸ் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சட்டம் மாநில உரிமைகளை பறிக்கும் என திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பிரதமர் மோடியின் பேச்சு:


பொது சிவில் சட்டம் மீதான கருத்து கணிப்பு கடந்த மாதம் தொடங்கிய நிலையில், அண்மையில் அந்த சட்டத்தை அமலபடுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி பேசியிருந்தார். அதன்படி “இருவிதமான சட்டங்களால் நாட்டு நிர்வாகத்தை நடத்த முடியாது. நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம். ஆனால், பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்” என பேசினார். அவரது இந்த பேச்சு எதிர்க்கட்சிகள் மத்தியில் மீண்டும் பரபரப்பை கிளப்பியது. 


பாஜகவின் நோக்கம் என்ன?


2014 மற்றும் 2019 என இரண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய வாக்குறுதி பொது சிவில் சட்டம். நேரு பிரதமரான காலகட்டத்தில் இருந்தே விவாதிக்கப்பட்டு வரும் இந்த சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம்,  சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படும் என இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், பாஜக அரசு மீண்டும் பொது சிவில் சட்டத்தை ஆய்வுக்கு உட்படுத்த தொடங்கியுள்ளது.