ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவராக முதன்முறையாக கடந்த ஆண்டு இந்தியா தலைமையேற்றது. அதைதொடர்ந்து, இன்று நடைபெற உள்ள அந்த அமைப்பின் உச்சி மாநாட்டை தலைவர் என்ற அடிப்படையில் முன்னின்று நடத்தும் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக அதனை தொடங்கி வைக்கிறார்.
முக்கிய தலைவர்கள் பங்கேற்பு:
மாநாட்டில் பங்கேற்க சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்பட்டையில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இதர நாடுகளின் தலைவர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை, ஆசியான் உள்ளிட்ட 6 சர்வதேச, பிராந்திய அமைப்புகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். உக்ரைனுக்கு எதிரான போரின் காரணமாக, கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த மாநாட்டில் புதின் பங்கேற்க உள்ளார். அதேநேரம், இந்திய எல்லையில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வரும் சீனா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நோக்கம் என்ன?
இந்தியா தலைமையில் நடைபெறும் இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு SECURE என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. Security - பாதுகாப்பு, Economic development - பொருளாதார வளர்ச்சி, Connectivity - இணைப்பு,Unity - ஒற்றுமை, Respect for sovereignty and territorial integrity - இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை, Environmental protection - சுற்றுச்சூழல் பாதுகாப்பு அகியவை குறித்து விவாதிக்கும் நோக்கில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
சூடுபிடிக்க போகும் விவாதம்:
மாநாட்டில் ஆப்கானிஸ்தான் விவகாரம், உக்ரைன் போர் நிலவரம், ஷாங்காய் அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரித்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதோடு, பிராந்திய பாதுகாப்பு நிலவரம் பற்றியும், போக்குவரத்து தொடர்பு, வர்த்தகம் ஆகியவற்றை பெருக்குவதற்கான வழிகள் பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. ஈரான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்படும் எனவும், பெலாரஸிற்கும் அந்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்றால் என்ன?
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 2001ஆம் ஆண்டு ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஜஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளால் ஷாங்காய் நகரில் நடைபெற்ற மாநாட்டின்போது தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் கடந்த 2005ம் ஆண்டு இந்தியா இணைந்த நிலையில், 2017ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிரந்தர உறுப்பினர்களாக இணைந்தன. ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு என்பதுதான் உலகிலேயே மிகப்பெரிய கூட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆறு ஆண்டுகளில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அனைத்து செயல்பாடுகளிலும் இந்தியா தீவிரமான மற்றும் நேர்மறையான பங்கை தந்துள்ளது. இந்நிலையில் தான், கடந்த ஆண்டுசெப்டம்பரில் சமர்கண்டில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் , முதன் முறையாக அந்த அமைப்பின் தலைவர் பதவியை இந்தியா ஏற்றுக்கொண்டது.