அந்நிய செலாவணி மீறல் வழக்கில் ரிலையன்ஸ் அணில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவர் அனில் அம்பானியிடம் அமலாக்க இயக்குனரகம் நேற்று விசாரணை நடத்தியது. 


ஃபெமா சட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் கீழ் அனில் அம்பானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று காலை 10 மணிக்கு மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி, மாலை 6 மணிக்கு வெளியேறியுள்ளார். இந்த விசாரணைக்கு பிறகு அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானிக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அனில் அம்பானியின் மனைவி டீனா அம்பானி, அன்னியச் செலாவணிச் சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் வழக்கில் அமலாக்க இயக்குநரகம் (ED) முன் இன்று ஆஜரானார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.


அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (ஃபெமா) கீழ் அமலாக்கத்துறை வழக்கை விசாரித்து வருகிறது. அதன்படி, அனில் அம்பானி தனது நிறுவனங்களில் 2007 ஆம் ஆண்டு அன்னிய நேரடி முதலீடு (FDI) வடிவில் பெரும் தொகையை இந்தியாவிற்கு கொண்டு வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் அமலாக்கத்துறை தற்போது விசாரித்து வருகிறது. அம்பானி தனது நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் இந்தியாவுக்கு அந்நிய நேரடி முதலீட்டின் கீழ் பணத்தைக் கொண்டுவருவதற்கு முன்பு, வெளிநாடுகளில் கடன் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.


தொடர்ந்து, கடந்த 2015ம் ஆண்டில் பணத்தை திருப்பி செலுத்துவதாக தெரிவித்து அந்த பெருந்தொகை வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பெருந்தொகை சுமார் 2,000 கோடியாக இருக்கலாம் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. 


இந்தநிலையில்தான், இந்த பணம் கடனாகவோ அல்லது அந்நிய நேரடி முதலீட்டாகவோ கொண்டுவரப்பட்டதா என்பதை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. மேலும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திருப்பிச் செலுத்தப்பட்ட பணத்தை அனில் அம்பானி வெளிநாட்டில் வைத்திருக்கிறாரா என்பதையும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. 


இதை தொடர்ந்து ஜெர்சி, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் மற்றும் சைப்ரஸில் உள்ள அனில் அம்பானியுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புள்ள பாடிஸ்ட் அன்லிமிடெட் உட்பட 18 கடல்சார் நிறுவனங்களை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. 


2020 ஆம் ஆண்டில், ரிலையன்ஸ் ஏடிஏஜி நிறுவனங்களுக்கு யெஸ் பேங்க் வழங்கிய ரூ. 12,500 கோடி கடன் தொடர்பாக அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை நேற்று 9 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது. அதேபோல், ராணா கபூரின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு ADAG ரூ.1,100 கோடி கடனாக வழங்கியதாகவும் அமலாக்கத்துறை விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.