இந்தியாவின் பிரபலமான பாடகிகளில் ஒருவர் லதா மங்கேஷ்கர். லதா ஜி என அழைக்கப்படும் இவருக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தமிழில் வலையோசை கலகலவென உள்ளிட்ட பாடல்களை பாடியிருக்கிறார். மும்பையில் வசித்து வந்த அவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று உடல் நலம் மோசமடைந்ததாக தகவல் வெளியானது. 


உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கடந்த வாரம் தெற்கு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் என பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 92 வயதான லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் திடீர் திடீரென மாற்றம் ஏற்படுவதாக தகவல் வெளியாகி அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று காலை முதல் அவரது உடல்நிலை மோசமடைந்து வந்ததாக தகவல் வெளியானது. மேலும், வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. 






இந்நிலையில், இன்று மாலை 8 மணி நிலவரப்படி, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் அதற்கு ஒத்துழைப்பு வருவதாகவும் மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது. மருத்துவனமை சென்று அவரைச் சந்தித்து வந்த மற்றொரு பிரபல பாடகரான ஆஷா போன்ஸ்லே, லதா மங்கேஷ்கர் மீண்டும் உடல் நலம் தேறி வருவதாக தெரிவித்துள்ளார்.






இந்தியாவின் நைட்டிங்கேல், இந்தியாவின் வாய்ஸ், இந்திய சினிமாவின் சிறந்த பாடகர்களில் ஒருவர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான லதா மங்கேஷ்கர், 1942ஆம் ஆண்டு தனது 13ஆவது வயதில் தனது இசைப் பயணத்தை தொடங்கினார். 


இந்திய மொழிகள் பலவற்றிலும் 30,000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் லதா மங்கேஷ்கர் பத்ம பூஷண், பாரத் ரத்னா, தாதா சாகேப் பால்கே என இந்தியாவின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண