திருமணமான சகோதரிக்கு 4 சகோதரர்கள் சேர்ந்து நிலம், நகை, வாகனங்கள் என, ரூ.8 கோடியை வரதட்சணையாக கொடுத்த சம்பவம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது. அந்த வரதட்சணை பொருட்கள் அனைத்தையும் மாட்டு வண்டி மற்றும் ஒட்டகத்தின் மீது ஏற்றி, பெண்ணின் வீட்டார் ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளனர்.


ஆச்சரியமூட்டிய சகோதரர்களின் வரதட்சணை:


இந்தியாவில் 1961ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வரதட்சனை தடை சட்டத்தின் படி, வரதட்சனை கொடுப்பது என்பது சட்டவிரோதம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி, வரதட்சணை கேட்டதாக குற்றம் உறுதியானால் ஒருவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.  இதுபோன்ற கடுமையான சட்டங்கள் அமலில் இருந்தாலும், வரதட்சனை கொடுப்பது என்பது இன்னும் பல கிராமங்களில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் ராஜஸ்தான் மாநிலம் நகார் மாவட்டத்தில் உள்ள திங்சாரா கிராமத்தை சேர்ந்த 4 சகோதரர்கள் சேர்ந்து, திருமணமான தனது சகோதரிக்கு 8 கோடியே 31 லட்ச ரூபாய் மதிப்பில் வரதட்சணை கொடுத்து காண்போரை ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.


பாரம்பரியமாக பின்பற்றப்படும் வரதட்சணை:


குறிப்பிட்ட நகார் மாவட்டத்தில் மைரா எனப்படும் வரதட்சணை முறை, பாரம்பரியமாக பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் தான், அர்ஜுன் ராம் மெஹாரியா, பகீரத் மெஹாரியா, உமைத் ஜி மெஹாரியா மற்றும் பிரஹலாத் மெஹாரியா ஆகிய 4 சகோதரர்கள் சேர்ந்து,  மார்ச் 26 அன்று திருமணமான தங்களது சகோதரி பன்வாரி தேவிக்கு வரதட்சணையை வாரிக் கொடுத்துள்ளனர்.  அதன்படி, திங்சாரா கிரமாத்தில் இதுவரை யாரும் கொடுத்திடாத அளவிலான வரதட்சணையை அவர்கள் கொடுத்துள்ளனர். 


வரதட்சணை விவரங்கள்:


அதன்படி, ரூ.2.21 கோடி ரொக்கம்,  ரூ.4 கோடி மதிப்பிலான 100 பிகாஸ் நிலம் (40 ஏக்கர்), ரூ.71 லட்சம் மதிப்பிலான 1 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள், ரூ.9.8 லட்சம் மதிப்புள்ள 14 கிலோ வெள்ளி நகைகள் வழங்கப்பட்டன.  800 தங்க காசுகள் கிராம மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. 7 லட்சம் மதிப்புள்ள டிராக்டரும் வரதட்சணையில் ஒரு பகுதியாக இருந்தது. மேலும் ஸ்கூட்டர் உள்ளிட்ட பல வாகனங்களும் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் திங்சாரா கிராமத்தில் இருந்து மணமகனின் ரைதானு கிராமத்திற்கு நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் ஒட்டகங்கள் மூலமாக கொண்டு வரப்பட்டது. இவற்றை காண ஏராளமான பொதுமக்கள் அந்த கிராமத்தில் குவிந்தனர்.


சாதனை முறியடிப்பு:


முன்னதாக அந்த மாவட்டத்தில் உள்ள புர்தி கிராமத்தை சேர்ந்த பன்வார்லால் சவுத்ரி என்பவர், தனது சகோதரியின் திருமணத்திற்கு ரூ.3 கோடியே 21 லட்சம் மதிப்பிலான வரதட்சணையை கொடுத்து இருந்தார்.  அந்த சாதனையானது தற்போது மெஹாரியா குடும்பத்தினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.