அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் கடந்த 2 அண்டுகளாக, அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள், அதிகாரிகள், பங்குதாரர்கள் என பலரிடம் கருத்துக்களைக் கேட்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.
100 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இழப்பு:
அதில், ”அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகள் செய்துள்ளது. ரூ.17.80 லட்சம் கோடி மதிப்பிலான தொகைக்கு அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்து, பங்குகளை திருத்தியுள்ளது” என குற்றம்சாட்டியது. இந்த அறிக்கை வெளியானதில் இருந்து, அதானி குழுமத்தின் பங்குகள் தொடர் சரிவை சந்தித்து பெரும் இழப்பை எதிர்கொண்டு வருகிறது.
அதானி குழும பங்குகளின் மதிப்பு கிட்டத்தட்ட 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதானி குழுமம் மறுத்துள்ளது. இந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மத்திய அரசு அதானியை பாதுகாத்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
மத்திய அரசு தலையிடவில்லை:
இந்நிலையில், அதானி விவகாரத்தில் மத்திய அரசு தலையிடவில்லை என பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் விளக்கம் அளித்துள்ளார். பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினராக உள்ள சன்யால் அமெரிக்காவில் நேர்காணல் ஒன்றை அளித்தார். அதில் இந்த விவகாரம் குறித்து விரிவாக பேசிய அவர், "அரசு எங்கும் தலையிடவில்லை. எங்கள் அமைப்பில் யாரும் யாரையும் காப்பாற்ற வேண்டியதில்லை" என்றார்.
நாட்டின் மிக பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, நாட்டின் மிக பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி ஆகியவற்றின் பங்குகள் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டது. பெரும் இழப்பை சந்தித்து வரும் அதானி குழுமத்தில் மத்திய அரசு நிறுவனத்தின் பங்குகள் முதலீடு செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இது தொடர்பாக விளக்கம் அளித்த பிரதமரின் பொருளாதார ஆலோசகர், "குறைந்த அளவிலான எல்.ஐ.சி, பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளே அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எந்த நிறுவனமும் நிதி நெருக்கடியில் இல்லை. சந்தைகள் வெளிப்படையானதாகவும், பண புழக்கத்தை உறுதி செய்வதே எங்கள் வேலை. நாங்கள் தலையிடுவதில்லை.
வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்கான சந்தை இயக்கம் மட்டுமே நாம் கவலைப்படும் ஒரே விஷயம். அதைத் தக்க வைத்துக் கொண்டால், சில நேரங்களில் விலை உயரும், சில சமயம் குறையும்" என்றார்.
அதானி குழுமத்தில் எல்.ஐ.சி நிறுவனம் 61.8 பில்லியன் ரூபாய்களை முதலீடு செய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, 270 பில்லியன் ரூபாய்களை முதலீடு செய்துள்ளது. சிலிக்கான் வேலி வங்கி திவாலானதால், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தாக்கம் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.