பாஜக vs எதிர்க்கட்சிகள்...தொடங்கிய சில நிமிடங்களிலேயே நாடாளுமன்றம் முடக்கம்...ஸ்தம்பித்த மக்களவை..!

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பிரச்னையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

Continues below advertisement

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எம்பியாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி முடங்கியுள்ளது.

Continues below advertisement

10ஆவது நாளாக தொடர் அமளி:

லண்டனில் ராகுல் காந்தி பேசிய விவகாரத்தை முன்வைத்து ஆளுங்கட்சியினரும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி எதிர்க்கட்சியினரும் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பிரச்னையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. இன்று நாடாளுமன்றம் கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை மதியம் 2 மணி வரையிலும் மக்களவை மாலை 4 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

ஒத்திவைப்புக்கு பிறகு மீண்டும் கூடிய நாடாளுமன்றத்தில் தொடர் அமளி ஏற்பட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு மம்தா ஆதரவு:

இந்த கூட்டத்தில், திமுக, சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், பாரத் ராஷ்டிர சமிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கேரளா காங்கிரஸ், திரிணாமுல், ஆர்எஸ்பி, ஆம் ஆத்மி, தேசிய மாநாடு, சிவ சேனா (உத்தவ்) உள்ளிட்ட கட்சி எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த மம்தாவின் திரிணாமுல் கட்சி எம்பிக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியை ஆதரித்து பாஜகவை கடுமையாக சாடியிருந்தார் மம்தா.

ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று, கருப்பு உடை அணிந்து வந்தனர்.

இதுகுறித்து பேசிய கார்கே, "இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதனால்தான், நேற்று அனைவருக்கும் நன்றி தெரிவித்தேன். இன்றும் நன்றி தெரிவித்தேன். ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்கவும், மக்களைப் பாதுகாக்கவும் முன்வருபவர்களை வரவேற்கிறோம். எங்களுக்கு ஆதரவளிக்கும் மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

இது தொடர்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேசுகையில், "பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாறியுள்ளனர்! கிரிமினல் பின்னணி கொண்ட பாஜக தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டாலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர்களின் பேச்சுக்காக தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள்" என்றார்.

Continues below advertisement