கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ராஷ்டிரிய ஜனதா தள கட்சி (ஆர்ஜேடி) தலைவரும் பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் இன்று இந்தியா திரும்புகிறார்.
தந்தைக்கு சிறுநீரகத்தை தானம் செய்த லாலுவின் மகள் ரோகினி ஆச்சார்யா, ட்விட்டரில் இது தொடர்பாக உணர்ச்சிபூர்வமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், இந்தியாவுக்கு லாலு திரும்ப உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
"ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். இந்த முக்கியமான விஷயம், நமது தலைவர் லாலுவின் உடல்நிலை பற்றியது. பிப்ரவரி 11ஆம் தேதியான இன்று சிங்கப்பூரில் இருந்து இந்தியா வருகிறார் அப்பா. ஒரு மகளாக என் கடமையைச் செய்து வருகிறேன்.
என் தந்தை நலம் பெற்ற பிறகு, உங்களை பார்க்க அனுப்பி வைக்கிறன். இனி நீங்கள் அனைவரும் என் தந்தையை கவனித்துக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்" என ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார் ரோகினி ஆச்சார்யா.
லாலுவின் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவரின் மகனும் பீகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், "எனது தந்தையின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பிறகு, அவர் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து ICU க்கு மாற்றப்பட்டார்.
மூத்த சகோதரி ரோகினி ஆச்சார்யா மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் இருவரும் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் நல்வாழ்த்துகளுக்கும் நன்றி" என பதிவிட்டிருந்தார்.
லாலுவின் உடல் நிலை குறித்து தேஜஸ்வி யாதவிடம் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்திருந்தார். முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், லாலுவின் அறுவை சிகிச்சைக்கு தனது சகோதரி ரோகினியின் சிறுநீரகம் பொருத்தமாக இருப்பது கண்டறியப்பட்டதாகவும், எனவே மாற்று அறுவை சிகிச்சை செய்யும் முடிவை குடும்பம் எடுத்திருப்பதாகவும் தேஜஸ்வி குறிப்பிட்டிருந்தார்.
74 வயதான லாலு, சில காலமாக கடுமையான சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
அதன்படி, அவரது மகள் ரோகினி அவருக்கு சிறுநீரகத்தை அளிக்க முன்வந்தார். அவரது வற்புறுத்தலுக்குப் பிறகு, சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.
ரோகினி ஆச்சார்யா, பொறியாளரான ராவ் சம்ரேஷ் சிங் என்பவரை மணந்து சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.