லக்கிம்பூரில் 4 விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியதே ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலும் நடக்கின்றன. அவற்றிற்கும் இதேபோல் குரல் கொடுக்க வேண்டும். அந்த சம்பவம் பாஜக ஆளும் உ.பி.யில் நடக்கவில்லை என்பதால் அமைதி காப்பதேன் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.


மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். ஹார்வர்டு கென்னடி பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடந்த கலவரம் குறித்தும், அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவரிடம், இந்தியாவையே உலுக்கிய லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியோ அமைச்சர்களோ இதுவரை ஒருவார்த்தைகூட சொல்லாதது ஏன் என்றும், அவ்வாறு கேள்வி எழுப்பப்படும் போது ஏன் தற்காப்பு நிலைக்கு அரசு செல்கிறது என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.


இதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், "நிச்சயமாக இல்லை. நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டதற்கு நன்றி. லக்கிம்பூரில் நடந்தது நிச்சயமாக கண்டனத்துக்கு உரிய சம்பவம் தான். ஆனால், இதேபோன்ற சம்பவங்கள் வேறு இடங்களிலும் நடக்கின்றன. அவற்றைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை. அது பாஜக ஆளும் உ.பி.யில் நடக்கவில்லை என்பதால் யாரும் பேசுவதில்லையா? 


மேலும், நானோ எங்களின் பிரதமரோ இவ்விஷயத்தில் தற்காத்துக் கொள்ளவில்லை. நாங்கள் எப்போதும் இந்தியாவின் சார்பில் தான் பேசுகிறோம். நான் இந்தியாவுக்காக பேசுவேன். ஏழைகளின் நீதிக்காகப் பேசுவேன். அதைவிதித்து ஏதேனும் கேலி கூத்தான விஷயங்களைப் பற்றி பேசுவதாயின், நான் அதிலிருந்து விலகி உண்மையைப் பற்றி பேசுவோமோ என்று கேட்பேன்" என்றார்.




"லக்கிம்பூர் சம்பவத்தில் உண்மை கண்டறியப்படும், நீதி நிலைநாட்டப்படும். அது அமைச்சர் மகனாகவே இருந்தலௌம் சரி. நீதி நிலைநாட்டப்படும். அமர்த்தியா சென் போன்ற அறிஞர்கள் எல்லா வன்முறை சம்பவங்கள் குறித்தும் கேள்வி எழுப்ப வேண்டும். லக்கிம்பூர் சம்பவம் போன்று பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் சம்பவம் பற்றி மட்டும் பேசக்கூடாது" என்றும் அவர் கூறினார்.


கடந்த அக்டோபர் 3ஆம் தேதியன்று, லக்கிம்பூர் கெரி என்ற இடத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மத்திய அமைச்சர் மற்றும் மாநில துணை முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் மீது வாகனம் ஏற்றப்பட்டது. இதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை பிரதமர் ஏதும் கருத்து தெரிவிக்காத நிலையில், அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.