நானா பேட்டின் சம்தே கல்லில் வசிக்கும் 28 வயதான ஆலியா மொஹமது யூசுப் என்னும் பெண் சமரதா காவல் நிலையத்தில் தன் கணவர் வாட்ஸாப்பில் முத்தலாக் தெரிவித்ததாக புகாரளித்ததை அடுத்து அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்தது. அவரது புகாரில் அவரது கணவர் பெயர் சஜித் மக்தம் ஷைக் என்றும் அவரது மாமியார் பெயர் ஸைபுநிஷா என்றும் தெரிகிறது. அவர்கள் கஞ்ச் பேட்டில் உள்ள லோஹியா நகரில் வசிக்கின்றனர். தன் கணவரும் தாயும் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும் தனது அப்பாவிடம் இருந்து காசு வாங்கி வர சொல்லி வற்புறுத்தியதாகவும் புகார் அளித்துள்ளார். மேலும் அவரை வீட்டிற்கு ஏர் கூலர் வாங்கி தர சொல்லியும், அயர்ன் பாக்ஸ் வாங்கி தர சொல்லியும் அடித்திருக்கிறார்கள். அது மட்டுமின்றி ஒரு வீடு வாங்கி தர சொல்லி துன்புறுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தன் தந்தையின் வீட்டில் வாழ்ந்து வந்திருக்கிறார்.



இந்நிலையில், கடந்த மார்ச் 10 ஆம் தேதி தனது கணவர் வாட்ஸாப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதனை திறந்து பிளே செய்து பார்த்த ஆலியாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது கணவர் அதில் மூன்று முறை தலாக்… தலாக்… தலாக்… என்று கூறியிருந்தார். இஸ்லாமிய மத முறை படி தலாக் என்று மூன்று முறை கூறினால் தன் மனைவியை விவாகரத்து செய்வது என்று அர்த்தம். இவ்வாறு புகாரளித்த ஆலியாவின் புகார் மனுவை கருத்தில் கொண்டு உடனடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கினர். போலீசார் அவரது கணவர் மீது IPC 498 A, 323, 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அது மட்டுமின்றி இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு சட்டம் 2019 இன் 3 மற்றும் 4 வது செக்ஷனின் கீழும் வழக்கு பதிய பட்டுள்ளது. கடந்த 11 ஆம் தேதி இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. காவல்துறை சப் - இன்ஸ்பெக்டர் பி.ஹெச். கோபடே இந்த வழக்கை விசாரித்த வருகிறார். 



இஸ்லாமிய பெண்களை தலாக் கூறி கணவர் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடைவிதிக்கும் அவசர சட்டத்தை கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது. இதற்கு மாற்றான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா என்ற பெயரிலான இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து முத்தலாக்கிற்கு எதிரான புதிய சட்டம்  2019ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கலாம். மனைவி மற்றும் குழந்தைக்கு கணவன் நிதி வழங்குவது குறித்து நீதிபதி முடிவு செய்யலாம்.