உத்தரப்பிரதேச அரசு அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி லக்கிம்பூர் செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டுள்ள நிலையில், வன்முறை தொடர்பாக அமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஷ்ரா சரணடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, விவசாயிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறினார்.


ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் அடங்கிய 5 பேர் கொண்ட குழு லக்கிம்பூர் செல்ல திட்டமிட்ட நிலையில், அவர்கள் அங்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.


இந்த நிலையில், இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு  ராகுல் காந்தி எம்பி பேட்டியளித்தார். அந்தப்பேட்டியில், “லக்கிம்பூர் செல்ல தனக்கு உத்தரப்பிரதேச அரசு விதித்த தடை உத்தரவு பொருந்தாது. லக்கிம்பூர் சென்று உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளோம். ஜீப்பால் மோதி விவசாயிகள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் கொல்லப்பட்ட வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை. வன்முறைக்கு காரணமாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் கைது செய்யப்படவில்லை. அகங்காரத்தின் காரணமாக விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிராகரிக்கிறத” என்று கூறினார்.






மேலும், நேற்று லக்னோ சென்ற பிரதமர் நரேந்திர மோடி லக்கிம்பூர் செல்லாதது ஏன்? என  கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால்தான் இந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சிகளின் பணியே அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுதான் என்றும் கூறினார்.  ஊடங்கள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் அரசு கட்டுப்படுத்துவதாகவும் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். அரசியல் தலைவர்களை உத்தரப்பிரதேசத்தில் அனுமதிக்க மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


இந்த நிலையில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா இன்று உத்தரப்பிரதேச காவல்துறையிடம் சரணடையலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


முன்னதாக, பிரியங்கா காந்தி தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சீதாப்பூரில் செல்போன் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.