கடந்த ஞாயிறு அன்று பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் – கௌரி தம்பதியின் மகன் ஆர்யன் கான் மும்பையில் சொகுசுக் கப்பலில் நடைபெற்ற போதை விருந்தில் பங்கேற்றபோது போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்காக சென்றிருந்த நடிகர் ஷாரூக் கான் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மும்பை திரும்பி உள்ளார்.


ஆர்யன் கான் கைதை தொடர்ந்து ஷாரூக் கான் மீது பல்வேறு விமர்சனங்களை பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மகன் போதைப் பொருள் வழக்கில் கைதானதுடன் சமூக வலைதளங்களில் எழும் இந்த விமர்சனங்களால் ஷாரூக் கான் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.


இதனிடையே, மறுபுறம் ஷாரூக் கானுக்கு ஆதரவும் பெருகி வருகிறது. பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலர் ஷாரூக் கானை மும்பையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சல்மான் கானும் ஷாரூக் கான் வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பியவுடன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதே போல், ஷாரூக் கானின் இந்த கடினமான காலத்தில் அவரது ரசிகர்களும் தொடர்ந்து ஆதரவுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.



ஷாரூக் கானுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களும் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். நேற்று ஒருபடி மேல் சென்று ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் பெயரில் We Stand with Aryan Khan என்ற பெயரில் ட்விட்டரில் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர் ஷாரூக் கானின் ரசிகர்கள். இதற்காக ஷாரூக் கானின் ரசிகர்கள் தயாரித்த லோகோவும் வைரலாகி வருகிறது. அந்த லோகோ, அல்லது ஷாரூக் கான் அல்லது ஆர்யன் கான் படங்களை தங்கள் ப்ரொபைல் படமாக ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில்  ரசிகர்கள் மாற்றினர்.


சில ரசிகர்கள் ஷாரூக் கான், ஆர்யன் கானுக்கு ஆதரவாக பதாகைகளை தயாரித்து அதனுடன் நின்று படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். அதில் ஒரு ரசிகர், ”ரசிகர்களாகிய நாங்கள் உங்களுக்காக எப்போதும் இருப்போம். உங்கள் மீதான எங்கள் அன்பு இறுதி மூச்சு வரை அப்படியே இருக்கும். தைரியமாக இருங்கள். உங்களுக்கு கூடுதல் பலம் உண்டாகட்டும்.” என எழுதிய பதாகையை ஏந்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.






சமூக வலைதளங்களை கடந்து பல ரசிகர்கள் ஷாரூக் கானுக்கு ஆதரவாக வீதிகளில், போஸ்டர், பேனர் வைத்து இருக்கின்றனர். குறிப்பாக ஷாரூக் கானின் மன்னாத் இல்லத்தின் வாயிலின் பேனர் ஒன்றை அவரது ரசிகர்கள் வைத்து உள்ளனர். அதில், “உலகின் அனைத்து மூளைகளிலும் உள்ள உங்கள் ரசிகர்கள் உங்களை ஆழமாக எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி நேசிக்கிறோம். இந்த சோதனையான காலத்தில் உங்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம். TAKE CARE KING!” என எழுதி உள்ளனர்.