லக்கிம்பூர் கெரி விவசாயிகள் மீதான வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனுவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஷிவ் குமார் திரிபாதி, சிஎஸ் பாண்டா ஆகிய இரண்டு வழக்கறிஞர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்வது நீதியின் நலனுக்காக இருக்கும் என்று கூறி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் உடன் போலீஸ் கண்காணிப்பு இல்லாமல் சுற்றித் திரிந்தால் சாட்சியங்களை சிதைக்க வாய்ப்பு உள்ளது என்று வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.






உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3ஆம் தேதி 8 பேர் உயிரிழந்த வன்முறை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தை ஏற்றியதிலும், காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதிலும் விவசாயிகள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என எட்டு பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை, தொடர்பாக இந்திய உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ததாகவும், தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.


ஆனால், தலைமை நீதிபதி என்.வி ரமணன் இதை மறுத்தார். சிவ் குமார் திரிபாதி, சிஎஸ் பாண்ட ஆகிய இரண்டு வழக்கறிஞர்கள் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளதாக தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாகவும் என்.வி ரமணன் தெரிவித்தார்.


இந்நிலையில், லக்கிம்பூர் படுகொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. "நீங்கள் யாருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளீர்கள், அவர்களை கைது செய்தீர்களா? இல்லையா? என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று தலைமை நீதிபதி என்.வி ரமணன் தெரிவித்தார். இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் அண்மையில் தொடங்கியுள்ளது.