உத்தரப் பிரதேச மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல்களைக் குறித்து, தெலங்கானாவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் அவருக்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


தெலங்கானா எம்.எல்.ஏ பேசியவை தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது. 


ஹைதராபாத் பகுதியின் கோஷாமகால் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவும் பாஜகவைச் சேர்ந்தவருமான ராஜா சிங் உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பாஜகவுக்கு வாக்களிக்காதவர்களின் வீடுகள் புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டு இடிக்கப்படும் என மிரட்டியுள்ளார். 



யோகி ஆதித்யநாத்துடன் ராஜா சிங்


கடந்த பிப்ரவரி 15 அன்று வீடியோ வெளியிட்ட ராஜா சிங், அதில், `பாஜவுக்கு வாக்கு செலுத்தாதவர்களுக்கு இதனைக் கூற விரும்புகிறேன். யோகிஜியிடம் ஆயிரக்கணக்கான புல்டோசர்கள் கைவசம் இருக்கின்றன. தேர்தலுக்குப் பிறகு, யோகிஜிக்கு வாக்கு செலுத்தாத பகுதிகள் அடையாளம் காணப்படும். புல்டோசர்களின் பயன் என்னவென்று உங்களுக்குத் தெரியும். உத்தரப் பிரதேசத்தில் யோகிஜி மீண்டும் முதல்வர் ஆவதை விரும்பாத துரோகிகளிடம் இதனைக் கூறுகிறேன். நீங்கள் உத்தரப் பிரதேசத்தில் வாழ வேண்டும் என்றால் `யோகி யோகி’ என்று மந்திரம் ஓத வேண்டும்; இல்லையேல் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும்’ எனக் கூறியுள்ளார். 


இதனையடுத்து இந்தியத் தேர்தல் ஆணையம் ராஜா சிங்கின் மிரட்டல் தேர்தல் விதிமீறல் என சுட்டிக்காட்டியிருக்கிறது. `தேர்தல் வாக்குரிமைகளை சுதந்திரமாக பயன்படுத்துவதற்கு வேண்டுமென்றே இடையூறு செய்பவர்கள் தேர்தலின் தவறான முன்னுதாரணமாகக் குற்றத்தில் ஈடுபடுபவர்களாகக் கருதப்படுவர்’ என இபிகோ 1860-ல் உள்ள 171சி சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 






ராஜா சிங்கின் சர்ச்சைக்குரிய பேச்சைத் தொடர்ந்து தெலங்கானாவின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், முதல்வர் சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டரகா ராமா ராவ் தன்னுடைய ட்விட்டரில் அதனைக் கண்டிக்கும் விதமாக, `இவர்களின் செயல்கள் இதைவிட கீழானதாக இருக்க முடியுமா என நினைத்துக் கொண்டிருக்கும் போதே, மற்றொரு காமெடியன் மேலெழுந்து வருகிறார்’ எனக் கிண்டல் செய்துள்ளார். 



யோகி ஆதித்யநாத்துடன் ராஜா சிங்


திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மௌவா மொய்த்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியையும், தேர்தல் ஆணையத்தையும் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.






தெலங்கானாவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் அடிக்கடி சர்ச்சைக்குரிய விதத்தில் சமூகங்களிடையே மோதலைத் தூண்டும் விதமாகப் பேசி வருபவர். கடந்த 2017ஆம் ஆண்டு, இந்துக்கள் 2002ஆம் குஜராத்தில் நிகழ்த்தியதைப் போல மீண்டும் செயல்பட வேண்டும் என 2002ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்த இனப்படுகொலையைச் சுட்டிக்காட்டியவர். மேலும் அவர் காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம்கள் துரோகிகள் எனவும் கூறியுள்ளார்.