உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் எனுமிடத்தில் கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு தழுவிய ரயில் மறுப்பு போராட்டம்  நடத்தப்படும் என்று விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவாசாயிகள் மீதி  மத்திய  இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தை ஏற்றிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின. காரை எற்றியதாலும், சிலர் (காவல்துறை) துப்பாக்கிச்சூடு நடத்தியதிலுமென விவசாயிகள், பாஜக தொண்டர்கள்,  பத்திரிக்கையாளரென 8 பேர்  உயரிழந்தனர்.   

இந்த கோர சம்பவத்துக்குக் காரணமான ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஷ்ராவைப் பதவிநீக்கம் செய்து, சட்டநடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமெனவும், ஆஷிஷ் மிஸ்ராவை கொலைவழக்கின் கீழ் கைதுசெய்ய வேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்டெய்த்,"தங்கள் மீது கார் ஏற்றியதற்கு எதிர்விணையாற்றும் விதமாக மூன்று பாஜக ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர். இது, திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல" என்று தெரிவித்தார்.   

ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவரும், அரசியல் ஆய்வாளருமான யோகேந்திர யாதவ் பேசுகையில், "அக்டோபர் 3 வன்முறை  சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. விரைவில் நீதி கிடைக்கும் ஏன நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.                 

தொடர்ச்சியான போராட்டங்கள் அறிவிப்பு:  

மூன்று வேளான் சட்டங்களை திரும்ப பெறுவதை வலியுறுத்தியும், லக்கிம்பூர் படுகொலை சம்பவத்தைக் கண்டித்தும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா (விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு) அடுத்த இரண்டு வாரங்களுக்கு பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளது. 

அறிவிப்பின் படி, 

வன்முறை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அக்டோபர் 12ம் தேதி நாடு முழுவதும் மின் விளக்குகளை  ஏந்தி போராட சிவில் சொசைட்டிக்கு யோகேந்திர யாதவ்  அழைப்பு விடுத்தார். அக்டோபர் 15-ஆம் தசரா திருவிழாவை முன்னிட்டு, பிரதமர் உருவப்படம் எரிக்கும் போராட்டம் நாடு தழுவிய அளவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.         

அக்டோபர் 18-ஆம் தேதி நாடுதழுவிய ரயில் மறிப்பு போராட்டம் நடைபெறும் என்று ராகேஷ் தெரிவித்தார். விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு முன்னெடுத்து நடத்தும் இந்த போராட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில்கள் இயங்க தடைவிதிக்கப்படும் என்றும் கூறினார். 

விவசாயிகளின் போராட்டக் குரல்களை ஒருங்கிணைக்கும் விதமாக அக்டோபர் 26-ஆம் தேதி லக்னோவில் மகாபஞ்சாயத்து  நடைபெறும் என்றும் கூறினார்.

அமைச்சர் மகன் கைது:    இதற்கிடையே, உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் என்னுமிடத்தில் கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் நேற்று கைது செய்யப்பட்டார். நேற்று, காலை 10 மணிக்கு  குற்றப்பிரிவு காவல்துறை ஆஷிஸ் மிஸ்ரா ஆஜரானார். கிட்டத்தட்ட 12 மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.