தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பிற்காக செல்லும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கையை  குறைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். தலைநகர் சென்னையில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் அடங்கிய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 


மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500 மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார், கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.


காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.ஒன்பது மாவட்டங்களிலும் இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தை மாநில தேர்தல் ஆணையம் நாளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.


சென்னை போரூரில் திமுக, அமமுகவினர் இடையே வாக்குச்சாவடியில் மோதல் ஏற்பட்டது. கற்கள், மிளகாய் பொடி வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது. 


வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளைய தினம் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.


தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன பெண் குழந்தையை 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கட்டை பையில் போட்டு தூக்கிச்சென்று கடத்தினார். இந்நிலையில், தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து பட்டுக்கோட்டையில் குழந்தையை மீட்டனர்.


சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. தக்காளி ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தல வழக்கில் ஆந்திராவை சேர்ந்த சுதாகரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், போரூர் அடுத்த கொளப்பாக்கத்தில் இந்த ஆந்திர தம்பதிக்குச் சொந்தமான வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 


முந்திரி தொழிற்சாலை ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ். மற்றும் அவரது தொழிற்சாலையில் உள்ள நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலிசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். 


திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, இறந்த தாயாரின் சடலத்தை 7 நாட்களாக வீட்டினுள் கிடத்தி வைத்து மகள்கள் இருவரும் தங்களது தாயை உயிர்பிப்பதாகக் கூறி ஜெபம் செய்து வந்த சம்பவம் திருச்சியை உலுக்கியுள்ளது. சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னரே அவர்களது தாயாரின் உடல் மீட்கப்பட்டது. 


குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து குவித்ததற்கு முகாந்திரம் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது.


வருமானக் கணக்கை குறைத்து காட்டியதால் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு, கர்சன் எஸ்டேட்டுகளின் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறையினர் முடக்கியுள்ளனர்.


இன்னும் 2 நாட்களில் நிலக்கரி விநியோகம் மேம்படவில்லை என்றால் தலைநகர் டெல்லி இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாக டெல்லி ஆம் ஆத்மி அரசு எச்சரித்துள்ளது. ஏற்கனவே, .தமிழ்நாடு மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களின் நிலக்கரி பற்றாக்குறை குறித்து கவலை எழுப்பியிருந்த நிலையில் டெல்லி அரசும் அபாய ஒலியை எழுப்பியுள்ளது.


காங்கிரஸ் கட்சியின் உயர் முடிவுகளை எடுக்கும் காரியக் கமிட்டிக் கூட்டம் வரும் 16-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


முதல்முறையாக இந்தியா வந்துள்ள டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு நாட்டு நல்லுறவு குறித்தும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் வர்த்தகத்தை ஊக்குவிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக மத்திய அரசின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


 இந்தியா டென்மார்க் இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகி உள்ளன.நிலத்தடி நீராதாரம் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட தலைப்புகளின் கீழ்  இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.


ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனியார் டிடெக்டிவ் என்று அடையாளம் காட்டப்பட்ட கோசாவி, ஏற்கனவே பல வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி என்று தகவல் வெளியாகியுள்ளது.


சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்ட நிலையில், இன்று 2வது பாடல் வெளியிடப்பட்டது.