உச்சநீதிமன்றத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாலின சமத்துவத்தை பேசுபொருளாக கொண்டு வெளியாக ’லாபதா லேடீஸ்' இன்று (09.08.2024) திரையிடப்பட உள்ளது. 


இந்திய உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டு எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவர்களது குடும்பத்தினர்கள் பங்கேற்கும் திரைப்பட திரையிடல் நடைபெற இருப்பதாக உச்சநீதிமன்ற நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது. 


கிரண் ராவ் இயக்கியிருக்கும் படம்  ‘லாபதா லேடீஸ் ‘. பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அமீர் கான், கிரண் ராவ், கோதி தேஷ்பாண்டே ஆகிய மூவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள். இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஒரே ரயிலில் பயணம் செய்யும் புதிதாக திருமணமான இரண்டு பெண்கள் தவறுதலாக வெவ்வேறு இடங்களுக்கு சென்றுவிடுவதால் ஏற்படும் குழப்பங்களும், அதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளுமே இப்படம்.


எளிமையான ஒரு கதையின் வழியாக கிராமப் புறங்களில் பெண்கள் ஒடுக்கப்படும் விதம் , அவர்களின் உணர்ச்சிகள், முன்னேற்றத்துக்கான வேட்கை, சமத்துவம் மற்றும் காதலை மிக அழகாக இப்படத்தில் பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார் கிரண் ராவ். பாலின சமத்துவம், பெண்களின் உரிமை உள்ளிட்டவை குறித்து பேசியிருந்தது.


உச்ச நீதிமன்றத்தில் உள்ள அட்மினிஸ்ட்ரேடிங் பில்டிங் காம்ப்ஸில் அமைந்துள்ள ஆடிட்டோரியத்தில் இன்று (09/08/2024) மாலை 4.15 - 6.20 மணியளவில் லாபதா லேடீஸ் திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது. 


இந்த திரையிடல் நிகழ்வில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள், அவர்களது மனைவிகள் ஆகியோர் கலந்து கொண்டு திரைப்படத்தை காண இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தின் இயக்குநர் கிரண் ராவ்,தயாரிப்பாளர் அமீர் கான் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.