தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சருக்கு எல்.முருகனுக்கு இரண்டு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இருந்த நிலையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


துறைகள் ஒதுக்கீடு:


18வது மக்களவை தேர்வு செய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினத்தில் பிரதமர் மோடி உள்பட 72 அமைச்சர்கள் குடியரசுத் தலைவர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இந்நிலையில், இன்று, அமைச்சராக பொறுப்பேற்று கொண்டவர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


அதன்படி, நிதின் கட்கரிக்கு சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமனுக்கு நிதியமைச்சர் பதவியும், ஜெய்சங்கருக்கு வெளியுறவு அமைச்சர் பதவியும், ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்பு அமைச்சர் பதவியும், அமித் ஷாவிற்கு உள்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.


மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்:


இந்நிலையில் , தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகனுக்கு இரண்டு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவருக்கு இதற்கு முன்பு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராகவும், மீன்வளம், கால்நடை பராமரிப்பு துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.


இந்நிலையில், தற்போது தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராகவும், அத்துடன் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராகவும் பொறுபேற்றார்.




மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்.பி-யாக தேர்வாகியிருந்த எல்.முருகன், மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் பாஜகவின் சார்பாக போட்டியிட்டார். ஆனால், வெற்றி பெறவில்லை. எனினும் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளதால், அவர் எம்.பி., பதவியை தக்க வைத்து கொண்டார். 


இந்நிலையில், நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது போன்றே நிதியமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவியை தக்கவைத்துக் கொண்டனர்.


மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் மத்திய இணை அமைச்சராக நேற்று நடைபெற்ற விழாவில் எல்.முருகன் பதவியேற்றார். 


இந்நிலையில், அவருக்கு இரண்டு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டு பாஜகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Also Read: நிர்மலாவுக்கு நிதி.. அமித் ஷாவுக்கு உள்துறை..ராஜ்நாத்துக்கு பாதுகாப்பு.. முக்கிய துறைகள் யாருக்கு?